உள்ளூர் செய்திகள்

கல்வியில் கவனம் தேவை: முதலமைச்சர்

அவர் பேசியதாவது:சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும், நான் செய்வேன் என்பதற்கு, எடுத்துக்காட்டு தான் சென்னையில் கருணாநிதி பெயரில் மருத்துவமனையும், மதுரையில் நுாலகமும். தமிழகத்தி்ன் தலைநகர் சென்னை என்றால், கலைநகர் மதுரை. தலைநகரில், அண்ணாதுரை நுாற்றாண்டு விழாவின்போது, அவரது, பெயரில் கருணாநிதி நுாலகம் அமைத்து கொடுத்தார். தற்போது, கருணாநிதி நுாற்றாண்டு விழாவில், அவரது பெயரில், நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது. இவை, இரண்டும், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாதவை.சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில், நுாலகம் வைக்காமல் வேறு எங்கு வைக்க முடியும். இந்நுாலகம் வாயிலாக, இனி அறிவுத்தீ பரவும். நுாலகம் பிரமாண்டமாக அமைய காரணமான அதிகாரிகள், ஊழியர்களுக்கு என் பாராட்டுக்கள். ஐ.டி., நிறுவனமான எச்.சி.எல்., நிறுவனர், அரசு பள்ளியில் படித்து, சொந்த முயற்சியில் நிறுவனம் துவங்கி, 2 லட்சம் பேருக்கு வேலை கொடுத்துள்ளார். இலக்கியம், பத்திரிகை, சினிமா என, அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்தவர் கருணாநிதி. அவரே, ஒரு நுாலகம் தான்.தி.மு.க., என்பது அரசியல் மட்டுமல்ல, அறிவு இயக்கம். கல்வி மட்டுமே யாராலும் திருட முடியாத சொத்து. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திட்டங்கள், கருணாநிதியால் உருவாக்கப்பட்டவை. தி.மு.க., ஆட்சியில் தான், கல்வி புரட்சி உருவானது. காமராஜர் பிறந்தநாளை, கல்வி வளர்ச்சி நாளாக, கருணாநிதி தான் அறிவித்தார். தி.மு.க., முதல்முறை ஆட்சிக்கு வந்தபோதே, ஏராளமான கல்லுாரிகள் உருவாக்கப்பட்டன. தரமான கல்வி வழங்குவதில், நாட்டிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தை பிடிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் படிக்கும்போது கல்வியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். நாளைய எதிர்காலம் நீங்கள் தான்.இவ்வாறு அவர் பேசினார்.நுாலக அமைப்பு விபரம்கலைநயமான நுழைவு வாயில், வண்ணமயமான வேலைப்பாடுகளுடன் கூடிய எட்டு தளங்கள், சிரித்த முகம் கொண்ட கருணாநிதி உருவம் கொண்ட ஜெர்மன் தொழில் நுட்பத்திலான கண்ணாடி முகப்பு, இரண்டரை லட்சம் புத்தகங்கள், புத்தகம் படிப்பதற்கான அமைதியான அறைகள், டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் என மதுரை மக்களுக்கு அனைத்து ஆச்சரியங்களும் ஒரே இடத்தில் ஜொலிக்கும் இடமாகவும், நகரின் மற்றொரு முகமாகவும் இந்நுாலகம் அமைந்துள்ளது.வாகன நிறுத்துமிடம், நாளிதழ்கள் சேமிப்பு அறை, நுால் கட்டும் பிரிவு கொண்ட அடித்தளம், கலைக்கூடம், மாற்றுத்திறனாளி பிரிவு, மாநாட்டு கூடம், வி.ஐ.பி.,க்கள் அறை, சொந்த நுால்கள் படிக்கும் பிரிவு 1, பல்வகை பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கை பிரிவு, மின்கட்டுப்பாட்டு அறை, தபால் பிரிவுகள் கொண்டதாக தரைத்தளம் அமைந்துள்ளது. கலைஞர் பிரிவு, குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம், பருவ இதழ்கள், நாளிதழ்கள் படிக்கும் பிரிவு, குழந்தைகள் நுாலகம், சொந்த நுால்கள் படிக்கும் பிரிவு-2, அறிவியல் உபகரணங்கள் பிரிவு கொண்ட முதல்தளம், தமிழ் நுால்கள் பிரிவு கருணாநிதியின் நினைவை போற்றும் அவரது கவிதைகள், கட்டுரைகள், அரசியல், இலக்கியம், வரலாறு புத்தகங்கள், திரைப்படத்துறை தொடர்பான புத்தகங்கள் அடங்கியதாக இரண்டாம் தளம் அமைந்துள்ளது.மூன்றாவது தளத்தில் ஆங்கில நுால்கள், ஆராய்ச்சி இதழ்கள், தமிழ் நுால்கள் பிரிவுகள், நான்காவது தளத்தில் 30 ஆயிரம் புத்தகங்களுடன் போட்டித் தேர்வர்களுக்கான பிரிவு, ஐந்தாம் தளத்தில் அரிய வகை நுால்கள், மின் நுாலகம், பல்லுாடகம், ஒளி ஒலி தொகுப்புகள், காட்சியகம், மின்னுருவாக்கம், பார்வையற்றோருக்கான மின் நுால், ஒலி நுால் ஸ்டுடியோ, நுண்பட அட்டை அறைகள் அமைந்துள்ளன. ஆறாவது தளத்தில் ஆங்கில நுால்கள் (இரவல் பிரிவு), நுால் பகுப்பாய்வு, நுால் பட்டியல் தயாரித்தல், நுாலக நிர்வாகம், நுால்கள் கொள்முதல், பணியாளர்கள் உணவருந்தும் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வளாகத்தின் உட்பகுதிகளில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதி, ஆறு மாடிகளுக்கு செல்ல நகரும் படிக்கட்டுகள், வளாகத்தின் நடுப்பகுதியில் சூரிய வெளிச்சம் கிடைக்கும் வகை கண்ணாடி பேழையிலான ஹைடெக் கூடாரம் என நுாலகம் ஜொலிக்கிறது. இந்நுாலகம் மதுரையின் இன்னொரு அடையாளமாக திகழும். நுாலகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்து நூலகத்தை பார்வையிட்டார். முன்னதாக, நூலகத்தின் முகப்பில் இருந்த கருணாநிதி சிலையையும் திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி, வேலு, அன்பில் மகேஷ், நேரு உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்