கொடி நாள் வசூல்:ஆசிரியர்கள் எதிர்ப்பு
சென்னை: ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கொடி நாள் நிதியை கட்டாயப்படுத்தி வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.முன்னாள் படைவீரர் கொடி நாள் நிதி வசூலிக்க, ரசீது புத்தகங்கள், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வகை பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர்கள் வழியே கொடி நாள் நிதிக்கான கட்டாய வசூல் துவங்கியுள்ளது. ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியரும், தங்கள் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களிடம் தலா 300 ரூபாய் வீதம் வசூல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.இது தவிர மாணவர், பெற்றோர், மாணவர் சங்கத்தினரிடமும், தனியாக வசூலிக்க, மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இதற்கு ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. கொடி நாள் நிதியை விருப்பம் உள்ளவர்களிடம் மட்டுமே, வசூலிக்க வேண்டும். மாறாக, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கட்டாய வசூல் செய்வது, நன்கொடை என்பதில் இருந்து கொடி நாள் கட்டணம் என்ற நிலையை ஏற்படுத்துவதாக, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள், கொடி நாள் நிதி வழங்க சிரமப்படுகின்றனர். எனவே கட்டாய வசூலை நிறுத்த வேண்டும் என்றும், ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.