சர்ச்சையான சி.இ.ஓ., அவசர பதவியேற்பு
சென்னை: பள்ளிக்கல்வியில் இடமாறுதல் சர்ச்சையான நிலையில், கோவை உள்ளிட்ட புதிய இடங்களில், சி.இ.ஓ.,க்கள் அவசரமாக பதவியேற்றனர்.தமிழக பள்ளிக்கல்வியில் வருவாய் மாவட்ட அளவிலான முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி செயலர் தரப்பில், இடமாறுதல் வழங்கப்படும். கடந்த, 11ம் தேதி, கோவை, திருப்பூர், ராணிப்பேட்டை மாவட்ட சி.இ.ஓ.,க்களுக்கு, பள்ளிக்கல்வி செயலர் பிறப்பித்த, இடமாறுதலில் சர்ச்சை ஏற்பட்டது. ராணிப்பேட்டை சி.இ.ஓ., உஷா இடம் மாற மறுத்தார். கோவை மாவட்ட சி.இ.ஓ., சுமதி பணி விடுவிப்பு பெற்று, புதிய இடமான ராணிப்பேட்டையில் சேர வழியின்றி தவித்தார். இந்த சிக்கலில், திருப்பூர் சி.இ.ஓ., பாலமுரளி, கோவை மாவட்டத்திற்கு இடம் மாற தயங்கினார்.கடந்த, 10 நாட்கள் நீடித்த இந்த இடியாப்ப சிக்கல், பள்ளிக்கல்வி நிர்வாகத்துக்கு பெரும் தலைவலியாக இருந்தது. இதற்கு, நேற்று முன்தினம் இரவில், புதிய உத்தரவின் வழியே தீர்வு காணப்பட்டது. இதன்படி, கரூர் சி.இ.ஓ., திருப்பூருக்கும், திருப்பூர் சி.இ.ஓ., கோவைக்கும், கோவை சி.இ.ஓ., கரூருக்கும் மாற்றப்பட்டனர்.இந்த விவகாரம் குறித்து, நேற்று நமது நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, பள்ளிக்கல்வி அதிகாரிகளின் உத்தரவுப்படி, திருப்பூர் சி.இ.ஓ., பாலமுரளி, அங்கிருந்து பணி விடுவிப்பு பெற்று, கோவை மாவட்ட சி.இ.ஓ.,வாக, நேற்று காலை, அவசர அவசரமாக பொறுப்பேற்றார். மற்றவர்களும் பணியிடம் மாறி கொண்டனர். சில அரசு அதிகாரிகள், ஐதீக முறைப்படி, செவ்வாய் கிழமை பதவி ஏற்பதில்லை. ஆனால், இடமாறுதல் விவகாரம் சர்ச்சையானதால், நேற்று செவ்வாய் கிழமையானாலும், பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.