நர்ஸ்களுக்கு தேவை பாசிடிவ் எண்ணம்
மதுரை: நோயாளிகளை அணுகும் போது நர்ஸ்களுக்கு பாசிடிவ் எண்ணம் தேவை என சென்னை அரசு சித்த மருத்துவக்கல்லுாரி முதல்வர் (ஓய்வு) கனகவள்ளி தெரிவித்தார்.மத்திய அரசின் ஆயுஷ் நிதியுதவியின் கீழ் மதுரை கோகிலா சித்த மருத்துவமனை சார்பில் மதுரையில் சித்தா படிப்பு முடித்த நர்ஸ்களுக்கான இலவச நர்சிங் ஆறு நாட்கள் சிறப்பு பயிற்சி நேற்று தொடங்கியது. கனகவள்ளி துவக்கி வைத்து பேசியதாவது: சித்தமருந்துகளை பற்றிய அறிவும் சிகிச்சை முறையும், பக்கவிளைவுகளை பற்றியும் நர்ஸ்கள் தெரிந்திருக்க வேண்டும். அவசர சிகிச்சை நோயாளிகளை அணுகும் போது நேர்மறை எண்ணத்துடன் பேச வேண்டும். அவர்களின் உணர்வுகளுக்கும் சென்டிமென்டுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும். சமூகவலைத்தளம் மூலம் நிறைய தெரிந்து வருபவர்களிடம் பொறுமையாக மருத்துவ, சிகிச்சை முறையை விளக்க வேண்டும். ஆயுஷ் துறையில் நர்சிங் படித்தவர்களுக்கு அதிலுள்ள 5 துறைகளிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன, என்றார்.மருத்துவமனை தலைவர் டாக்டர் ஜெயவெங்கடேஷ் பேசுகையில்,சிறப்பு குழந்தைகளுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பது சவாலான விஷயம். அதற்காகவே நர்ஸ்களுக்கு 6 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. உணவு, உறைவிடம், பயிற்சி அனைத்தும் மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது என்றார். டாக்டர்கள் மணிகண்டன், பவித்ரா, நிர்வாக அலுவலர் செந்தில்நாதன் கலந்துகொண்டனர்.