ஊனமுற்றவர்களுக்கென சிறப்பு தேர்வாணையம்: முதல்வர்
சென்னை: “ஊனமுற்றவர்களை அரசுப் பணிக்கு தேர்வு செய்வதற்கென, சிறப்பு தேர்வாணையம் அமைக்கப்படும், ” என, முதல்வர் கருணாநிதி பேசினார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. கூட்டமைப்பு சங்கங்களின் மாநிலத் தலைவர் சிதம்பரநாதன் தலைமை வகித்தார். முதல்வர் பேசியதாவது:ஊனமுற்றவர்களின் சிகிச்சைக்காகவும், அவர்களது வாழ்வை மேம்படுத்தவும் இந்த அரசு 100 கோடி ரூபாய்க்கும் மேல் நிதியை ஒதுக்கியுள்ளது. நீங்கள் எல்லாரும் மகிழ்ச்சியாக, சந்தோஷமாக இருப்பீர்கள் என்றால், அத்தொகையை 1,000 கோடி ரூபாயாக உயர்த்தவும் தயாராக இருக்கிறேன்.ஊனமுற்றவர்கள் இன்னும் நிறைய கோரிக்கைகளை என்னிடம் வைத்துள்னர். அவர்களது கோரிக்கைகள், புதிய சட்டசபை கட்டடத்தில், புதிய பட்ஜெட்டில் இடம் பெறும். ஊனமுற்றவர்களுக்கு அரசு இட ஒதுக்கீட்டில் 3 சதவீதம் உள்ளது. அதனால் 2,000 பேர் பயனடைந்துள்ளனர். இலவச பஸ் பயணம், விரைவு பேருந்துகளில் ஆண்டுக்கு ஒரு முறை இலவச பயணம் போன்ற பல சலுகைகள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் திறந்தநிலை பல்கலைக் கழகங்களில் ஊனமுற்றவர்களின் மேல் படிப்புக்கு செலவு இலவசமாக இந்த அரசு அளிக்கிறது. இந்த சலுகையால் 206 பேர் பயனடைந்துள்னர். எட்டு லட்சத்து 72 ஆயிரத்து 450 ரூபாய் கல்வி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை உட்பட 12 மாவட்டங்களில் ஊனமுற்றவர்கள் தங்கி பயிற்சி மேற்கொள்வதற்கென விடுதிகளுடன் கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஊனமுற்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு முறை இருந்தா<லும், அவர்களுக்கென சிறப்பு தேர்வாணையம் அமைக்கப்படும். இந்த புதிய அறிவிப்பு உங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியளிக்கும். ஊனமுற்றவர்களின் 400 பேருக்கு இலவச திருமண திட்டத்தின் எண்ணிக்கையை, ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு இரண்டு கோடியே 20 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும். கை, கால் ஊனமுற்றவர்களுக்கு வழங்கப்படும் 400 ரூபாய் உதவித்தொகை பட்டியலில் செவிதிறன் குறைவு, வாய் பேச முடியாதவர்களும் சேர்க்கப்படுவர். ஊனமுற்றவர்களுக்கு மூன்று சக்கர இலவச மோட்டார் சைக்கிள் 600 பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார். ஊனமுற்றவர்கள் 47 பேருக்கு, அரசு வேலைக்கான ஆணையை முதல்வர் வழங்கினார்.