உள்ளூர் செய்திகள்

கல்வி உதவித்தொகை திடீர் குறைப்பு

பெங்களூரு: கட்டுமானம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை மாநில அரசு குறைத்துள்ளதால், பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர்.கர்நாடகாவில் கட்டுமானம், இதர கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, தொழிலாளர் நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை உதவித்தொகை வழங்கி வந்தது.இந்நிலையில், தொழிலாளர் நலத்துறை கடந்த அக்டோபர் 30ம் தேதி ஒரு உத்தரவு வெளியிட்டது. அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை பின்வருமாறு, ஆண்டுதோறும் வழங்கப்படும். இதன்படி, ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை 1,100 ரூபாயும்; 6ம் வகுப்பு முதல் 7 ம் வகுப்பு வரை 1,250 ரூபாயும்; 8ம் வகுப்புக்கு 1,350 ரூபாயும்; 9ம் வகுப்புக்கு 3,000 ரூபாயும் வழங்கப்படும்.பட்டப்படிப்புக்கு 6 ஆயிரம் ரூபாயும்; பிஎச்.டி.,க்கு 11,000 ரூபாயும்; எம்.டி., படிப்புக்கு 12 ஆயிரம் ரூபாயும்; எல்.எல்.பி., படிப்புக்கு 10 ஆயிரம் ரூபாயும்; இன்ஜினியரிங், எம்.டெக்., நர்சிங், பாரா மெடிக்கல், முதுநிலை படிப்புக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்த உத்தரவு 2022 - 23ம் ஆண்டுக்கு பொருந்தும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.தொழிலாளர் துறையின் உத்தரவால், இந்த தொகையை நம்பி, தங்கள் குழந்தைகளை உயர்கல்வியில் சேர்க்க கடன் வாங்கிய தொழிலாளர்கள், அதிருப்தி அடைந்துள்ளனர். உத்தரவாத திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும் போது, கூலி தொழிலாளர்களான எங்கள் குழந்தைகளின் படிப்புக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை குறைத்திருப்பது வேதனை அளிக்கிறது என இவர்கள் தெரிவித்தனர்.இதற்கு முன், 1ம் வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரை 5,000 ரூபாயும்; 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 8,000 ரூபாயும்; 9 ம் வகுப்பு முதல் மெட்ரிகுலேஷன் வரை 12,000 ரூபாயும்; பட்டப்படிப்புக்கு 25 ஆயிரம் ரூபாயும்; எல்எல்.பி., - எல்.எல்.எம்.,க்கு 30 ஆயிரம் ரூபாயும்; முதுகலைக்கு 35 ஆயிரம் ரூபாயும்; பி.இ., பி.டெக்கிற்கு 50 ஆயிரம் ரூபாயும்; எம்.டெக்கிற்கு 60 ஆயிரம் ரூபாயும்; எம்.பி.பி.எஸ்.,க்கு 60 ஆயிரம் ரூபாய் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.கர்நாடக மாநில தொழிலாளர் நல வாரிய முன்னாள் இயக்குனர் சங்கர் கட்டிசங்கவி கூறுகையில், அரசின் இந்த உத்தரவால், ஏற்கனவே சில உயர்கல்வி மற்றும் தொழில் முறை படிப்பில் சேர்ந்த குழந்தைகளின் நிலை என்னவாகும். இந்த உத்தரவு, முந்தைய ஆண்டுக்கும் பொருந்தும் என்பது சரியில்லை. இதை உடனடியாக திருத்தம் செய்ய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்