ஐ.பி.எஸ்.,அதிகாரிகள் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை
இந்தியாவில், கடந்த 1999ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரையிலான இடைபட்ட காலத்தில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியின் ஆட்சியில், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணி நியமனத்தில் போதிய கவனம் செலுத்தாததே, கடும் பற்றாக்குறை நிலவ காரணம், என, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடந்தாண்டு தெரிவித்திருந் தார். எனவே, இந்த பற்றாக்குறையை போக்க, சிறப்பு தேர்வுகள் மூலம் பணி நியமனம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதன்படி, யு.பி.எஸ்.சி., மூலம் போட்டி தேர்வுகள் நடத்தி, ஆண்டுக்கு 70 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் என, பத்தாண்டுகளுக்கு நியமனம் செய்ய, ஐ.மு., கூட்டணி அரசு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான திட்டத்தை, அரசு விரைவில் இறுதி செய்யும்.இதுகுறித்து, அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இவ்விவகாரம் தொடர்பாக தீர்மானம் எடுத்த உடன், அதற்கான தேர்வுகள் நடத்தும் சட்டப் பூர்வ அமைப்பான யு.பி.எஸ்.சி.,யை அணுக உள்ளோம் என்றார்.