உள்ளூர் செய்திகள்

வழக்கிலிருந்து விடுவிக்க ஆசிரியரிடம் பேரம்

முதுகுளத்துார்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் மீது வரி ஏய்ப்பு புகாரில் சி.பி.ஐ., வழக்குபதிவு செய்துள்ளது. இவ்வழக்கிலிருந்து விடுவிக்க சி.பி.ஐ., அதிகாரி ஒருவர் ராமச்சந்திரனிடம் பேரம் பேசியதாக வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.முதுகுளத்துார் அருகே செம்பொன்குடியைச் சேர்ந்த ராமச்சந்திரன் கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது சேவையை பாராட்டி 2022ல் செப்.,5ல் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் ராமச்சந்திரனின் சகோதரர் பஞ்சாட்சரம் டேக்ஸ் இன்பர்மேஷன் நெட்வொர்க் என்ற நிதி நிறுவனத்தை மதுரை, ராமநாதபுரத்தில் நடத்தினார்.இங்கு இ பைல் செய்யும் போது பலரது வருமானத்தை குறைவாக காண்பித்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் நோக்கில் வரி ஏய்ப்பு செய்ததாக 2021ல் புகார் எழுந்தது. இப்புகாரில் சி.பி.ஐ., போலீசார்​ கடந்தாண்டு பஞ்சட்சரத்தை கைது செய்தனர். இவ்வழக்கில் பஞ்சாட்சரம், அவரது சகோதரர் ராமச்சந்திரன் வங்கி கணக்கிற்கு ரூ.12 லட்சம் வரை முறைகேடாக பணம் பரிமாற்றம் செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து சி.பி.ஐ., அதிகாரிகள் ராமச்சந்திரனையும் கைது செய்தனர். இவ்வழக்கு மதுரை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் நடக்கிறது.ராமச்சந்திரன் கூறியதாவது: என் சகோதரர் வழக்கு சம்பந்தமாக சி.பி.ஐ., போலீசார் என்னை கைது செய்தனர். ஜூன் 23ல் மதுரை சி.பி.ஐ., அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் ரூ. 7 லட்சம் கொடுத்தால் இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்வேன் என்று பேசினார். இதை வீடியோவாக பதிவு செய்துள்ளேன்.ஒரு சில நாட்களுக்கு முன் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கியதால் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது இந்த வீடியோவை வெளியிட்டேன். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு மீண்டும் வேலை கிடைக்க செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்