உள்ளூர் செய்திகள்

விரைவில் கிருஷ்ணகிரியில் உருது மேல்நிலைப்பள்ளி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி, 25வது வார்டுக்குட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில், 32 லட்சம் ரூபாய் மதிப்பில் உருது நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை நடந்தது.கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதாநவாப் தலைமை வகித்தார். மாவட்ட சி.இ.ஓ., மகேஸ்வரி, தி.மு.க., நகர செயலாளர் நவாப் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பணிகளை துவக்கி வைத்து பேசியதாவது:கிருஷ்ணகிரி நகரில், இஸ்லாமியர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் குழந்தைகள் படிப்பதற்காக சப்ஜெயில் ரோட்டில் உள்ள உருது நடுநிலைப்பள்ளியில், போதிய வசதிகள் இல்லாமல் இருந்தது. இதனால் குழந்தைகள் கல்வி கற்க முடியாத சூழல் இருந்தது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கைப்படி நகராட்சி தலைவர் மற்றும் கல்வி அதிகாரிகள் துணையோடு தற்போது நடுநிலைப்பள்ளிக்கான வகுப்பறை கட்டடம் கட்ட அரசு அனுமதியளித்து, கட்டுமான பணிகள் துவங்கவுள்ளன. இப்பகுதி மக்களின், 25 ஆண்டுகால கோரிக்கையான உருது மேல்நிலைப்பள்ளியும், வரும் ஆண்டில் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு பேசினார்.தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், பள்ளி தலைமையாசிரியர் யாரப் பாஷா மற்றும் கவுன்சிலர்கள் மத்தின், பாலாஜி உள்பட பலர் கலந்துகொண்டனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்