காஞ்சியில் மழையால் மாணவர்கள் அவதி
காஞ்சிபுரம்: தென்மேற்கு வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வட மாவட்டங்களில் மழை பெய்யும் என, வானிலை மையம் அறிவித்து இருந்தது.அதன்படி, காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் இருந்தே மழை பெய்ய துவங்கியது. நேற்று அதிகாலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு, தொடர்ச்சியாக மழை பெய்தது.காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் என, பள்ளி மாணவ- மாணவியரும், பெற்றோரும் எதிர்பார்த்து, பள்ளிக்கு செல்வதற்கான ஆயத்த பணியை துவக்காமல், டிவி முன் காத்திருந்தனர்.ஆனால், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் என, அறிவித்தது. இதனால், பெற்றோரும், பள்ளி, கல்லுாரி மாணவ- மாணவியரும், அவசர அவசரமாக புறப்பட்டு, குடை பிடித்தும், ரெய்ன்கோட் அணிந்தும், மழையில் நனைந்தபடியே பள்ளிக்கு தாமதமாக சென்றனர்.