பள்ளிகளில் ஆண்டு விழா கட்டாயம்
சென்னை: அனைத்து அரசு பள்ளிகளிலும், வரும், 10ம் தேதிக்குள் ஆண்டு விழாக்களை நடத்தி முடிக்க வேண்டியது கட்டாயம் என, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் அறிவொளி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மாணவனின் ஒட்டு மொத்த ஆளுமைத்திறன் வளர்ச்சிக்கு, வகுப்பறை கற்றல் அனுபவங்கள் மட்டுமின்றி, கல்வி இணை செயல்பாடுகள் மற்றும் புற கல்வி செயல்பாடுகளில் திறனை வளர்ப்பது முக்கியம்.இதுபோன்ற திறமை களை பள்ளிகளில் வளர்க்கும் மாணவர்கள், அதை தங்கள் பெற்றோர் முன்னிலையில் வெளிப்படுத்த, பள்ளி ஆண்டு விழா சிறந்த வாய்ப்பாக அமையும். தமிழகம் முழுதும் அரசு பள்ளிகளில், ஆண்டு விழா கொண்டாட நடப்பாண்டில், 15 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.எனவே, அனைத்து அரசு பள்ளிகளிலும், வரும், 10ம் தேதிக்குள், மாணவர்களின் பல்வகை திறன்களை வளர்க்கும் வகையில், ஆண்டு விழா நடத்தி முடிக்க வேண்டும்.