வாழ்நாள் சாதனையாளர் விருது விழா
சென்னை: வி.ஜி.பி., உலக தமிழ் சங்கத்தின் 31ம் ஆண்டு விழா, அச்சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம் தலைமையில், நேற்று, சென்னையில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின், ஆண்டு விழாவை வாழ்த்தி அனுப்பிய செய்தி வாசிக்கப்பட்டது.ஆண்டு விழா மலரை, இலங்கை கிழக்கு மாகாண கவர்னர் செந்தில் தொண்டமான் வெளியிட, முதல் பிரதியை முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம், மல்லை தமிழ் சங்க தலைவர் மல்லை சத்யா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.தொடர்ந்து, பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.சந்திரயான்- 3 புகழ் இஸ்ரோ திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், நல்லி குப்புசாமி, இலங்கை கிழக்கு மாகாண கவர்னர் செந்தில் தொண்டமான், சத்யபாமா பல்கலை வேந்தர் மரியஜுனா ஜான்சன் ஆகியோருக்கு, வி.ஜி.சந்தோசம் விருது வழங்கினார்.இலங்கை கிழக்கு மாகாண கவர்னர் செந்தில் தொண்டமான் பேசுகையில், வி.ஜி.சந்தோசம், இலங்கையில் திருவள்ளுவர் சிலைகளை நிறுவி, தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். திருவள்ளுவர் மக்களுக்கு ஆற்றிய எழுத்தை உலகம் முழுதும் கொண்டு சேர்த்து, பல மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார் என்றார்.இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அவ்வை அருள், சாய்ராம் கல்வி குழும தலைவர் சாய்பிரகாஷ் லியோமுத்து, வி.ஜி.பி., உலக தமிழ் சங்க துணைத் தலைவர் வி.ஜி.பி., ரவிதாஸ், செயலர் வி.ஜி.பி., ராஜாதாஸ் மற்றும் உலக தமிழ் அறிஞர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.