சிட்டுக்குருவி பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஏரிப்பட்டி பள்ளி மாணவர்களிடையே சிட்டுக்குருவி பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பொள்ளாச்சி அருகே, ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினத்தையொட்டி, சிட்டுக்குருவி பாதுகாப்பு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்களிடம் துண்டுபிரசுரங்களை வினியோகித்து, மாணவர்கள், ஆசிரியர்கள், பறவைகளுக்கு கொஞ்சம் நீர் வையுங்க என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இல்லம் தேடி தன்னார்வலர்கள், மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள், கோவிலில் மற்றும் பொது இடங்களில் சிட்டுக்குருவிகள் இனத்தை பாதுகாக்க விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர். பறவைகளுக்கு வெயில் காலத்தில் தானிய உணவு மற்றும் நீர் வைத்து காக்கவும் பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டது.ஆசிரியர் கீதா கூறியதாவது:மனிதனின் பழக்க வழக்கங்களால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாறுபாடு காரணமாக, சிட்டுக்குருவி இனம் அழிந்து வருகிறது. எரிவாயுக்களில் இருந்து, மெத்தில் நைட்ரேட் என்னும் வேதிப்பொருள் வெளிப்பட்டு பூச்சி இனங்கள் அடிக்கப்பட்டு குருவிகளுக்கு தேவையான உணவுகள் கிடைக்காமல் போகின்றன.மொபைல்போன் குருவிகளின் அழிவுக்கு முக்கிய காரணமாக உள்ளன. அலைபேசி தொடர்புகளிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு குருவியின் கருவை சிதைத்து விடுகிறது. முட்டையிட்டாலும் கருவளர்ச்சி அடைவது இல்லை.சிட்டுக்குருவிகள் கூடு கட்டுவதற்கு ஏற்ப கூரை வீடுகள் இருந்தன.இப்போது இருக்கும் கான்கிரீட் வீடுகளில் குருவிக்கூடு கட்டுவது சாத்தியம் இல்லை. சிட்டுக்குருவி தினத்தை மட்டும் கொண்டாடாமல் அந்த இனத்தையும் பாதுகாப்போம் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும், கோடை காலத்தில் பறவைகளின் தாகம் தீர்க்க தண்ணீர் வைக்கவும் வலியுறுத்தப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவர்கள், அட்டை பெட்டியில் தினமும், தானியங்களை வைப்பதுடன், போதிய நீரையும் வைக்கின்றனர். பறவைகள் உணவுகளை உட்கொள்ளவும், நீர் பருகவும் இதுபோன்ற செய்வதாக மாணவர்கள் தெரிவித்தனர்.