ஈஷாவில் தமிழ் தெம்பு திருவிழா
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், தமிழ் கலாசாரத்தின் பல்வேறு அம்சங்களை கொண்டாடி மகிழும் வகையில், தமிழ் தெம்பு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.ஆதியோகி முன்பு, மாலை 6:00 மணிக்கு, பறையாட்டம், சலங்கையாட்டம், தேவராட்டம், தஞ்சாவூர் தவில், கரகாட்டம் போன்ற பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்களின் சிறப்புகள், பக்திக்கும், கட்டட கலைக்கும் உதாரணமாக திகழும் தமிழ் கோவில்கள், தமிழ் சமூகத்திற்கு பங்காற்றிய தலைவர்களின் குறிப்புகள், பக்தியால் தமிழ் வளர்த்த நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களின் சிறப்புகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ள உதவும் வகையில், அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.இதைத்தவிர, நாட்டு மாடுகள் கண்காட்சி, சித்த மருத்துவ குடில், பாரம்பரிய உணவு, ராட்டினங்கள் குதிரை சவாரி போன்ற அம்சங்கள், இத்திருவிழாவில் இடம் பெற்றுள்ளன.இதில் விவசாயிகள் பயன்பெறும் விதமாக, நேற்று முதல் நாளை வரை நாட்டு மாட்டு சந்தை நடக்கிறது. இதில் நாட்டு மாட்டு இனங்களை வாங்கவும், விற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழ் தெம்பு என்ற பெயரில், பெண்களுக்கான சிறப்பு கோலப்போட்டி இன்று நடக்கிறது. இதில் பங்கேற்க, 9442510429, 82481 28349 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். கோவை ஈஷா யோகா மையத்தில் முதல்முறையாக, நாளை (மார்ச் 17) ரேக்ளா பந்தயம் நடக்கிறது.