லட்சம் விதைப்பந்து தயாரித்து சாதனை
சூலூர்: 2 தமிழ்நாடு விமானப்படை என்.சி.சி., சார்பில், 2 ஆயிரத்து, 100 மாணவர்கள், 11 லட்சம் விதைப்பந்துகள் தயாரித்து, சாதனை படைத்தனர்.கோவை குரூப் 2 தமிழ்நாடு விமானப்படை என்.சி.சி., சார்பில், கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் விதைப்பந்துகள் தயாரிக்கும் உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது. கமாண்டர் கர்னல் சிவா ராவ் துவக்கி வைத்தார். விமானப்படை என்.சி.சி., அதிகாரி விங் கமாண்டர் பர்குணன் முன்னிலை வகித்தார்.இந்த உலக சாதனை நிகழ்ச்சிக்கு, மதிப்பீட்டு அலுவலர்களாக ஓய்வு பெற்ற குரூப் கேப்டன் செந்தில்குமார், கோயமுத்தூர் பப்ளிக் ஸ்கூல் தாளாளர் நிர்மலா ஆகியோர் கண்காணித்தனர். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் துணை இயக்குனரக இயக்குனர் கமோடர் அதுல் குமார் ரஸ்தோகி, மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினார்.லிம்கா உலக சாதனைக்காக நடந்த இந்த நிகழ்ச்சியில், 2 ஆயிரத்து 100 மாணவர்கள், இரண்டு மணி நேரத்தில், 11 லட்சம் விதைப்பந்துகளை தயாரித்தனர். வனத்துறையினர் வழிகாட்டுதல்படி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், ஹெலிகாப்டர்கள் மூலம் விதை பந்துகள் தூவப்படும் என அதிகாரிகள் கூறினர்.விங் கமாண்டர் பர்குணன் தலைமையில், சதீஷ், ராஜேஷ், சூர்யா, உமா தேவி, ரவி, ஜைனுலாபுதீன், அருண், ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.