உள்ளூர் செய்திகள்

வானிலையை துல்லியமாக கணிக்க ஏ.ஐ.,

சென்னை: வானிலையை துல்லியமாக கணிக்க, தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதுடன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இந்திய வானிலை ஆய்வு மையத்தின், 150வது ஆண்டு விழா மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையத்தின், 80ம் ஆண்டு விழா, சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தேசிய கடலியல் ஆராய்ச்சி நிறுவனமான, என்.ஐ.ஓ.டி.,யில் நடந்தது.இதில், மத்திய புவி அறிவியல் துறை செயலர் ரவிச்சந்திரன், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் டைரக்டர் ஜெனரல் மொகபத்ரா, தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன், என்.ஐ.ஓ.டி., இயக்குனர் ராமதாஸ், சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், தமிழக வருவாய்த் துறை கமிஷனர் பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர்.விழாவில், வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் விஞ்ஞானிகள் கவுரவிக்கப்பட்டனர். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வரலாறு குறித்த குறும்படம் ஒளிபரப்பானது.புதிய ரேடார்கள்பின், மத்திய புவி அறிவியல் துறை செயலர் ரவிச்சந்திரன், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் டைரக்டர் ஜெனரல் மொகபத்ரா, தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் ஆகியோர் அளித்த பேட்டி:தமிழக தென் மாவட்டங்களில், சமீப காலங்களில் வெள்ள பாதிப்புகள் அதிகரித்தன. வருங்காலத் தில் தென் மாவட்டங்களில், வானிலை அசாதாரண சூழலை இன்னும் துல்லியமாக கணிக்க தேவையான உபகரணங்களை நிறுவ உள்ளோம்.இந்த ஆண்டு பெங்களூரில் புதிய ரேடார் அமைக்கப்படும். இந்த புதிய ரேடார், கர்நாடகாவை ஒட்டியுள்ள, தமிழக பகுதிகளில் வானிலை மாற்றங்களையும் சேர்த்து கண்காணிக்கும்.ஏற்கனவே திருவனந்தபுரம் மற்றும் கொச்சி ரேடார்களும், தமிழகத்தின் கேரள எல்லை மாவட்டங்களின், வானிலை கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன. சென்னை மற்றும் ஸ்ரீஹரிகோட்டா ரேடார்கள் மிகவும் பழமையாக உள்ளதால், 4 புதிய எஸ் பேண்ட் ரேடார்கள் அமைக்கும் பணிகள் துவங்கி விட்டன.இதுவரை, மாவட்ட அளவிலான வானிலை முன் அறிவிப்பை மேற்கொண்டு வருகிறோம். வருங்காலங்களில் தாலுகா அளவிலும், அதன்பின் பஞ்சாயத்து அளவிலும், துல்லியமான வானிலையை கணிக்கும் அளவுக்கு, தொழில்நுட்ப கருவிகளை நிறுவி வருகிறோம். இதற்கு, தமிழக வேளாண் பல்கலையுடன் இணைந்து, வானிலை ஆய்வு மையம் செயல்படுகிறது.இந்திய வானிலை ஆய்வு மையத்துடன் இணைந்து, தமிழகமும் மூன்று ரேடார்களை அமைத்து வருகிறது. ராமநாதபுரம், சேலம், ஏற்காடு ஆகிய இடங்களில், புதிய சி பேண்ட் ரேடார்கள் அமைக்க, இடம் தேர்வு நடந்து வருகிறது.ஏ.ஐ., டெக்னாலஜிதொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்ட வானிலை ஆய்வு கணினி பயன்பாட்டை அதிகரிக்க உள்ளோம். வானிலை மாற்றங்களை, 100 சதவீதம் துல்லியமாக கணித்து, அறிவிப்புகளை வெளியிட இலக்கு நிர்ணயித்து செயல்படுகிறோம்.தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதுடன், செயற்கை நுண்ணறிவு முறையையும் பயன்படுத்த முடிவு செய்து உள்ளோம். மேகங்களின் பரவல், காற்று வீசும் நிலை, ஈரப்பதம் அளவு, வெப்ப நிலை அளவு ஆகியவற்றை தனித்தனியாக செயற்கைக்கோள்களின் தரவுகளின்படியே நிர்ணயிக்க வேண்டியுள்ளது.தற்போதைய நிலையில், ஒரே செயற்கைக்கோளால், மேற்கண்ட அனைத்து காரணிகளையும் கணிக்கும் தொழில்நுட்பம் இல்லை; அதற்கும் முயற்சித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.வெப்ப அலை தாக்கம் ஏன்?வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:தற்போதைய அசாதாரணமான வெப்ப தாக்கமானது, வெப்பம் மற்றும் காற்றில் ஈரப்பதம் மிகுந்த வானிலை எனப்படும். ஏற்கனவே, தமிழகத்தில் வெப்ப அலை தாக்கங்கள் முந்தைய காலங்களில் இருந்துள்ளன. அதேநேரம், முந்தைய காலத்தை விட வெப்ப அலையின் உஷ்ணம், தற்போது அதிகமாக உணரப்படுகிறது.காற்றில் ஈரப்பதம் அதிகமாகி விட்டதால், முன்பை விட வெப்ப நிலை அதிகமாக உணரப்படுகிறது. ஈரப்பதம் நிலைமை என்பது வருங்காலத்திலும் அதிகரிக்கும். ஒரு டிகிரி செல்ஷியஸ் உயர்ந்தால், 7 சதவீதம் காற்றில் ஈரப்பதமும் உயர்கிறது. அதனால், வெப்ப தாக்கம் அதிகமாக இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்