மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கட்டணத்தில் விலக்கு?
சென்னை: அரசாணை பிறப்பிக்கப்பட்டு, 15 ஆண்டுகளுக்கு மேலாகியும், பல அரசு கல்லுாரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பல்கலைகள், திறந்தநிலை பல்கலைகள், சட்டம், மருத்துவம், பொறியியல், மீன்வளம், கால்நடை, பாலிடெக்னிக், சிறப்பு பயிலகங்கள் உள்ளிட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களித்து, 2008ல் அரசாணை எண், 135 உள்ளது.மேலும், ஆய்வுக்கூட கட்டணம், தேர்வு கட்டணம் உள்ளிட்ட சிறப்பு கட்டணங்களில் இருந்தும் விலக்களித்து, 2010ல் பிறப்பித்த அரசாணை எண், 30 உள்ளது.இந்த அரசாணைகளின் பயன்களை மாற்றுத்திறனாளி மாணவர்கள் பெற, உரிய விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, 2010ல் அப்போதைய மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலர், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் எழுதினார்.இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு, 15 ஆண்டுகள் மேலாகியும், பல கல்வி நிலையங்களில் கட்டணங்களுக்கு விலக்களிக்கபடாத அவலம் நீடிப்பதாக, தமிழக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.இதுதொடர்பாக, தலைமை செயலருக்கு சங்க தலைவர் ஜான்சிராணி அனுப்பியுள்ள மனு: வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கல்லுாரிகளில் துவக்கப்பட்டுள்ள நிலையில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான அரசாணையை முழுமையாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.உயர் கல்வித்துறை, சட்டத்துறை, மருத்துவத்துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட பல துறைகள் சம்பந்தப்படுவதால், அத்துறை செயலர்கள் கூட்டத்தை உடனடியாக கூட்டி, இந்த அரசாணையை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டப்பிரிவு -22ன் படி, கல்லுாரிகள் உள்ளிட்ட அனைத்து உயர் கல்வி நிலையங்களிலும், மாற்றுத்திறனாளிகள் குறைகளை தீர்க்கும் வகையிலும், குறைதீர் அதிகாரியை நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.