இலக்கிய திருவிழாவில் நுால்களுக்கு விருது
பொள்ளாச்சி: பொள்ளாச்சி இலக்கிய வட்டம், புன்னகை இலக்கிய அமைப்பு சார்பில், இலக்கிய திருவிழா, லயன்ஸ் கிளப் அரங்கில் நடந்தது.முதல் நிகழ்வாக, புன்னகை இலக்கிய விருதுகள் வழங்கும் விழா நடந்தது. கவிஞர் ரமேஷ்குமார் வரவேற்றார். கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். சிறந்த கவிதை தொகுப்புகளுக்கான புன்னகை இலக்கிய விருது வழங்கப்பட்டது.கவிஞர் பூவிதழ் உமேஷ் எழுதிய துரிஞ்சி, இலக்கியனின் சிறுகுடிநிலத்தின் பெரும்வாதை, காளிதாஸின் சடவு, அமுதா ஆர்த்தியின் கடலுக்கு பறவையின் குரல் ஆகிய நுால்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.விருது பெற்ற நுால்கள் குறித்து கவிஞர்கள் நிழலி, பூபாலன், சிவக்குமார், பவித்ரா ஆகியோர் பேசினர். இதழாளர்கள் குறித்து கவிஞர் செந்தில் பேசினார்.இரண்டாவது அமர்வில், கவிஞர் அம்சபிரியா எழுதிய, ஏழு நுால்கள் வெளியிடப்பட்டன. குழந்தைகளுக்கான பண்பாட்டை தக்க வைக்கும் விதமாக மூன்று சிறுகதை நுால்கள் சிறார் இலக்கியமாக வெளியிடப்பட்டது. சிறுவர்களே வெளியிட சிறுவர்கள் பெற்றுக்கொண்டனர்.குழந்தைகளுக்கான இலக்கியம் ஏன் அவசியம் என்பது குறித்து கவிஞர் தமிழ்பித்தன் பேசினார். சிறார் நுால்கள் குறித்து கவிஞர்கள் உதயகண்ணன், ஜெயக்குமார், தமிழ்செல்வன் ஆகியோர் பேசினர்.விருது பெற்ற படைப்பாளிகளை பாராட்டியும், கவிதை போக்குகள் குறித்தும், இளம் படைப்பாளர்களின் படைப்புகள் குறித்தும் கவிஞர் அமிர்தம் சூர்யா பேசினார்.கவிஞர் அம்சபிரியா எழுதிய இலக்கிய நுால்களை கவிஞர்கள் பெற்றுக்கொண்டனர்.தொடர்ந்து, தமிழியின் பரதநாட்டியம், பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் தேவராட்டம் நிகழ்ச்சி நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை கவிஞர்கள் சோலைமாயவன், செந்தில் மற்றும் இலக்கிய வட்டத்தினர் செய்திருந்தனர்.