ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
உடுமலை : அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.முதற்கட்டமாக, ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை துவங்கியது. கடந்த இரண்டாண்டுகளாக, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கும் எண்ணும் எழுத்தும் முறையில் கற்பிக்கப்படுகிறது.இதற்கான பயிற்சி, ஒவ்வொரு பருவம் வாரியாக ஆசிரியர்களுக்கு நடத்தப்படுகிறது. உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரங்களில், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு ஆசிரியர்களுக்கான, முதல் பருவத்துக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நான்கு நாட்களாக நடந்தது. உடுமலையில் பழனியாண்டவர் மில்ஸ் அரசு துவக்கப்பள்ளி, போடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், குடிமங்கலத்தில் சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், பயிற்சி வகுப்பு நடந்தது.உடுமலையில் நடந்த பயிற்சியை, தாராபுரம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஜெகதீசன், திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் இளங்கோவன், துணை முதல்வர் விமலாதேவி, வட்டார கல்வி அலுவலர்கள் சரவணக்குமார், மனோகரன், ஆறுமுகன் பார்வையிட்டனர்.