அண்ணா பல்கலையில் மாணவர்களுக்கு கட்டுப்பாடு
சென்னை: அண்ணா பல்கலையில் படிக்கும் மாணவர்கள் கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் என, அப்பல்கலை தெரிவித்துள்ளது.சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை உள்ளாக்கப்பட்டதை தொடர்ந்து, பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து, பதிவாளர் பிரகாஷ் தலைமையில் ஆய்வு கூட்டம், நேற்று நடந்தது.அதில், பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணையை மேற்கொள்ள, கிண்டி பொறியியல் கல்லுாரி முதல்வர் ஈஸ்வரகுமார், கல்வியியல் புலக்குழு இயக்குனர் குமரேசன், மாணவர்கள் மைய இயக்குனர் பாஸ்கரன், கிண்டி பொறியியல் கல்லுாரி பாலியல் வன்கொடுமை புகார் மைய இயக்குனர் பிரேமலதா, கோட்டூர்புரம் போலீஸ் அதிகாரி அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவினரும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, பல்கலை தரப்பில் கூறியதாவது:கல்லுாரி வளாகத்தில் உள்ள, சிசிடிவி கேமரா'க்கள் முழுதும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும். விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் யாரும் மாலை 6:30 மணிக்கு மேல் வெளியில் செல்ல அனுமதி கிடையாது.அனைத்து பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கேட்கும்போது, அடையாள அட்டையை காண்பித்து, ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.பாதுகாப்பு தொடர்பாக மாணவர்களின் பெற்றோரை அழைத்து ஆலோசனை நடத்தப்படும். மேலும், பொறியியல் கல்லுாரி வளாகங்களில், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட வேண்டும்.இவ்வாறு பல்கலை தரப்பில் கூறப்பட்டது.