ஐ.ஐ.டி., ஆய்வகங்களை பார்வையிட வாய்ப்பு
சென்னை: கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி., உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில், மாணவர்கள் தலைமையில் நடக்கும் தொழில்நுட்ப ஆராய்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றை, பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பார்வையிடும் வகையில், வரும் ஜன., 2, 3, 4 ஆகிய தேதிகளில் அனுமதி வழங்கப்பட உள்ளது.இதற்கு: https://shaastra.org/open-house என்ற இணையதள இணைப்பின் வாயிலாக பதிவு செய்ய வேண்டும்.இது குறித்து, சென்னை ஐ.ஐ.டி.,யின் இயக்குநர் காமகோடி கூறியதாவது:'அனைவருக்கும் சென்னை ஐ.ஐ.டி.' என்ற நோக்கத்துடன், திறந்தவெளி ஆய்வக பார்வைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த இரண்டாண்டுகளில் நடந்த கண்காட்சிகளில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பார்வையிட்டுள்ளனர்.தற்போது, மாணவர்கள், ஆசிரியர்கள் தலைமையிலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து, 80 அரங்குகளில் நேரடி செயல்விளக்கம் அளிக்கப்படும். இதில், 18 துறைகளை உள்ளடக்கிய நான்கு தேசிய ஆராய்ச்சி மையங்கள், 11 கல்வி நிறுவன ஆராய்ச்சி மையங்கள், 15 உயர் சிறப்பு ஆய்வகங்களை மாணவர்கள் காணலாம்.இவ்வாறு அவர் கூறினார்.