பொதுத்தேர்வு நிறைவு மாணவர்கள் உற்சாகம்
பாலக்காடு: கேரள மாநிலத்தில், கடந்த 5ம் தேதி துவங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று நிறைவு பெற்றது.நேற்று, பத்தாம் வகுப்பு உயிரியல் பாடத் தேர்வு நடந்தது. தேர்வு முடிந்ததும், மாணவர்கள் நண்பர்களுடன், மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டாடினர். கடந்த 5ம் தேதி துவங்கிய பிளஸ் 1 தேர்வும், 6ம் தேதி துவங்கிய பிளஸ் 2 தேர்வும், கடந்த 28ம் தேதி நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு இன்று நிறைவு பெறுகிறது. பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்., 6 முதல் 10ம் தேதி வரையும், 16 முதல் 18ம் தேதி வரையும், 20 முதல் 25ம் தேதி வரையும் மூன்று கட்டங்களாக நடக்கிறது.பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி, ஏப்., 8ம் தேதி முதல் 18ம் தேதி வரையும், 20 முதல் 30ம் தேதி வரையும் இரு கட்டங்களாக நடக்கிறது. அனைத்து தேர்வு முடிவுகளும், மே மூன்றாம் வாரத்தில் அறிவிக்கப்படுகிறது.