ஆசிரியர் இடமாறுதல்; விண்ணப்பிக்க அறிவிப்பு
திருப்பூர்: தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், இடம் மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பை ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதற்கான அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இது 'எமிஸ்' இணையதளம் வாயிலாாக மேற்கொள்ளப்படும்.இடமாறுதலுக்கான விண்ணப்பங்கள் வரும் 15 முதல் 22ம் தேதி மாலை 6:00 மணிக்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பணியாற்றும் பள்ளியில் பணியில் சேர்ந்து ஓராண்டுக்குள் என்றாலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை தலைமையாசிரியர், பணி பதிவேட்டுடன் ஒப்பிட்டு சரி பார்த்து அனுமதிக்க வேண்டும். முதன்மை கல்வி அலுவலர்க்கு அந்த விவரம் சமர்ப்பிக்க வேண்டும்.முன்னுரிமை கோருவோர் அதற்கான ஆவணங்களை இணைக்க வேண்டும். தற்போது பணியாற்றும் இடத்துக்கு எந்த வகையில் நியமிக்கப்பட்டார் என்ற தகவல் அதில் இடம் பெற வேண்டும். அதே போல் ஆசிரியர் பயிற்றுநர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைமையாசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்தும் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.விண்ணப்பங்கள் வரும், 22ம் தேதி வரை பதிவேற்றம் செய்து, 24ம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலர் ஒப்புதல் அளிக்கப்படும். 25ம் தேதி காலியிட விவரங்கள் வெளியிடப்பட்டு, இறுதி முன்னுரிமை பட்டியல், 30ல் வெளியாகும். அதன்பின், உள் மாவட்ட கலந்தாய்வு ஜூலை, 1ம் தேதியும், பிற மாவட்டங்களுக்கு, 2ம் தேதியும் நடைபெறும்.மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு, 3ம் தேதி,அவர்களுக்கான இடமாறுதல், 4ம் தேதி உள்மாவட்டம், 5ம் தேதி வெளி மாவட்டங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.