நினைவாற்றலை வளர்க்கும் எளிய வழிகள்
“நேற்று படித்தது இன்று நினைவில் இல்லை!”தேர்வு நெருங்கும் நேரத்தில் பல மாணவர்கள் சொல்லும் பொதுவான புலம்பல் இது. படித்துக் கொண்டே இருக்கிறோம். புத்தகத்தை மூடும்போது எல்லாம் தெரிந்தது போல இருக்கிறது. ஆனால் சில மணி நேரம் கழித்து கேட்டால் பதில் வரவில்லை.இதற்கு நினைவாற்றல் குறைவு என்று உடனே முடிவு செய்துவிட வேண்டியதில்லை. பல நேரங்களில் நாம் படிக்கும் முறையில்தான் பிரச்சினை இருக்கும்.மீண்டும் படித்தால் போதுமா?ஒரு பாடத்தை ஐந்து முறை படித்தால் அது நன்றாக நினைவில் இருக்கும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் கண்களை ஓட்டிக்கொண்டு மீண்டும் மீண்டும் படிப்பது மட்டும் போதாது.ஒரு முறை படித்த பிறகு புத்தகத்தை மூடிவிட்டு, “நான் இப்போது என்ன படித்தேன்?” என்று நினைவிலிருந்து சொல்லிப் பாருங்கள்.முக்கியமான கருத்துகளை ஒரு தாளில் எழுதுங்கள். பிறகு புத்தகத்தைத் திறந்து பார்த்து, எதை விட்டுவிட்டீர்கள் என்று சரிபாருங்கள்.இந்தப் பயிற்சி, படித்ததை நினைவிலிருந்து மீட்டெடுக்க மூளைக்கு வேலை கொடுக்கிறது.சிறு பகுதிகளாகப் படியுங்கள்ஒரே நாளில் ஒரு பெரிய பாடத்தை முழுவதுமாக முடித்துவிட வேண்டும் என்று முயற்சி செய்வது பல நேரங்களில் சோர்வை ஏற்படுத்தும்.ஒரு பெரிய பாடத்தைச் சிறிய பகுதிகளாகப் பிரியுங்கள்.முதலில் ஒரு கருத்து.அடுத்து அதன் விளக்கம்.பிறகு உதாரணம்.கடைசியில் அதை நீங்களே சொல்லிப் பாருங்கள்.சிறிய பகுதிகளாகப் பிரித்துப் படித்தால், படிப்பது எளிதாகத் தோன்றுவதோடு, எதைப் புரிந்துகொண்டோம், எதில் இன்னும் குழப்பம் இருக்கிறது என்பதும் தெரியும்.இடைவெளியுடன் படிப்பதுஒரே நாளில் பல மணி நேரம் தொடர்ந்து படிப்பதைவிட, இடைவெளி விட்டு அதே பாடத்தை மீண்டும் பார்ப்பது நினைவில் வைத்துக்கொள்ள உதவும்.உதாரணமாக, இன்று ஒரு பாடத்தைப் படித்தால், அடுத்த நாள் சில நிமிடங்கள் அதை நினைவுபடுத்திப் பாருங்கள். சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் பாருங்கள். பின்னர் ஒரு வாரத்துக்குப் பிறகு சோதித்துப் பாருங்கள்.ஒவ்வொரு முறையும் முழுப் பாடத்தையும் மீண்டும் படிக்க வேண்டியதில்லை. முக்கியமான கருத்துகளை நினைவிலிருந்து சொல்லிப் பார்ப்பதே போதுமான பயிற்சியாக இருக்கலாம்.மற்றவருக்குக் கற்றுக்கொடுங்கள்நீங்கள் படித்த பாடத்தை நண்பருக்கோ, தம்பி அல்லது தங்கைக்கோ விளக்கிப் பாருங்கள்.விளக்கும் போது ஒரு விஷயம் தெளிவாகத் தெரியும். நமக்கே தெரியாத இடங்கள் வெளிப்படும்.ஒரு கருத்தை எளிய வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை என்றால், அதை இன்னும் ஒருமுறை புரிந்துகொள்ள வேண்டியிருக்கலாம்.“நான் படித்துவிட்டேன்” என்பதற்கும் “நான் இதை மற்றொருவருக்குப் புரிய வைக்க முடியும்” என்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.குறிப்பெடுப்பதிலும் ஒரு கலைஆசிரியர் சொல்வதையெல்லாம் அப்படியே எழுதிக்கொண்டிருப்பது குறிப்பெடுப்பது அல்ல. முக்கியமான கருத்துகளைத் தேர்வு செய்து சுருக்கமாக எழுத வேண்டும்.ஒரு பக்கத்தில் பெரிய பத்திகளை நிரப்புவதற்குப் பதிலாக, முக்கியச் சொற்கள், குறுகிய குறிப்புகள், அட்டவணைகள், தொடர்பு வரைபடங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.பாடத்தை மீண்டும் படிக்கும்போது, அந்தக் குறிப்புகளைப் பார்த்தாலே முழுக் கருத்தும் நினைவுக்கு வர வேண்டும்.தூக்கத்துக்கும் நினைவுக்கும் தொடர்பு“இன்னும் இரண்டு மணி நேரம் படித்துவிட்டு தூங்குகிறேன்” என்று தேர்வு நேரத்தில் பல மாணவர்கள் தூக்கத்தைக் குறைத்துக்கொள்வார்கள்.ஆனால் தூக்கத்தை முழுமையாகத் தவிர்ப்பது நல்ல படிப்பு உத்தி அல்ல. உடலுக்கும் மூளைக்கும் ஓய்வு தேவை. குறிப்பாக தேர்வுக்கு முன்பு போதுமான தூக்கம் கிடைத்தால், அடுத்த நாள் கவனத்துடன் செயல்பட உதவும்.எனவே இரவு முழுவதும் விழித்திருந்து படிப்பதைவிட, திட்டமிட்டு படித்து சரியான நேரத்தில் ஓய்வெடுப்பது பயனுள்ளதாக இருக்கும்.உடலும் மூளையும் இணைந்தவைநினைவாற்றல் என்பது புத்தகத்துடன் மட்டும் தொடர்புடையது அல்ல. உடற்பயிற்சி, போதுமான தண்ணீர், சீரான உணவு, நல்ல தூக்கம், மன அமைதி ஆகியவையும் மாணவனின் கற்றல் திறனுடன் தொடர்புடையவை.நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதற்குப் பதிலாக இடையில் எழுந்து சிறிது நடப்பது, உடலை இயக்குவது போன்ற எளிய பழக்கங்களும் உதவியாக இருக்கும்.நினைவாற்றலின் ரகசியம்நல்ல நினைவாற்றல் என்பது சிலருக்கு மட்டும் கிடைத்த பரிசு அல்ல. சரியான படிப்பு முறையைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நினைவில் வைத்துக்கொள்ளும் திறனை மேம்படுத்திக்கொள்ள முடியும்.படித்தல்.புத்தகத்தை மூடி நினைவுபடுத்துதல்.எழுதிப் பார்ப்பது.மற்றவருக்கு விளக்குவது.இடைவெளி விட்டு மீண்டும் பார்ப்பது.இந்தச் சிறிய பழக்கங்களை தொடர்ந்து கடைப்பிடித்தால், “படித்தது மறந்துவிட்டதே!” என்ற கவலை படிப்படியாகக் குறையும்.மூளைக்கு வேலை கொடுங்கள். அது உங்களுக்காக வேலை செய்யத் தொடங்கும். கைப்பேசியை எங்கே வைப்பது? படிக்கும்போது அருகில் இருக்கும் கைப்பேசி கவனத்தைத் திருப்பக்கூடும். ஒரு செய்தி, ஒரு அறிவிப்பு, ஒரு காணொலி என்று தொடங்கினால், படிப்பிலிருந்து மனம் விலகுவது எளிது. அதனால் படிக்கும் நேரத்தில் தேவையில்லாத அறிவிப்புகளை நிறுத்திவைப்பது அல்லது கைப்பேசியைத் துாரத்தில் வைப்பது நல்ல பழக்கம்.