பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை
இந்தியாவில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) இருப்பதை கண்டுபிடிக்கும் பணியை வரும் 6 மாதங்களில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய உடல்நலம் மற்றும் குடும்ப நல அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது பேசிய அமைச்சர் குலாம் நபி ஆசாத், இந்த திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 6 குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து முடிக்கப்படும். 6 மாதத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள் எத்தனை பேருக்கு நீரிழிவு நோய் உள்ளது என்று கண்டறிந்துவிடுவோம். இந்த பணி அத்துடன் முடிவடையாது. மேலும் ஓராண்டிற்குள் கர்ப்பிணிகள், 30 வயதுக்குள் உள்ள ஆண், பெண் என இந்தியாவில் எத்தனை பேருக்கு நீரிழிவு நோய் உள்ளது என்ற துல்லியமான புள்ளி விவரத்தை சேகரித்து விடலாம் என்று நம்பிக்கைத் தெரிவித்தார். பள்ளிக் குழந்தைகளுக்கு காப்பீடு செய்யும் திட்டம் எதுவும் இதுவரை வரவில்லை என்றும் அவர் கூறினார்.