தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி இன்றுடன்(04.04.2016) நிறைவு!
இன்றும், உயர்கல்வி குறித்த சந்தேகங்களுக்கு கல்வியாளர்கள் விளக்கம் அளிக்கின்றனர். பிளஸ் 2 படிப்புக்கு பின், உயர்கல்வியில் என்ன படிக்கலாம்; எங்கு படிக்கலாம் என, மாணவர்களுக்கு ஆலோசனை கூறும், தினமலர் நாளிதழின் வழிகாட்டி நிகழ்ச்சி, இரண்டு நாட்களாக, சென்னை, மதுரை மற்றும் கோவையில் நடந்து வருகிறது. இந்த ஆண்டு, பாரத் பல்கலையுடன் இணைந்து, தினமலர் நாளிதழ் நடத்தும் இந்த நிகழ்ச்சி, சென்னை, ராயப்பேட்டை, அரசு மருத்துவமனை எதிரில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், காலை, 10:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரை நடந்து வருகிறது. நிகழ்ச்சியின், இரண்டாம் நாளான நேற்று, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர், பெற்றோருடன் பெரும் திரளாக வந்து பங்கேற்றனர். கல்வியாளர்கள், பேராசிரியர்கள், கல்வி ஆலோசகர்கள், இந்த கருத்தரங்கில் பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு எண்ணிலடங்கா தகவல்களை வழங்கினர். கல்லுாரிகளில் சேர்வது எப்படி; என்னென்ன பாடப்பிரிவுகள் உள்ளன என, அப்ளிகேஷன் முதல் அட்மிஷன் வரை அனைத்து தகவல்களையும், கண்காட்சியில் உள்ள, 100க்கும் மேற்பட்ட கல்வி நிறுவன அரங்குகளில் மாணவர்கள் கேட்டறிந்தனர். என்ன படிப்பில் சேரலாம்; பாடப்பிரிவுகளின் வகைகள் என்ன; கல்லுாரிகளின் நடைமுறைகள் போன்றவை குறித்து, கல்லுாரி பிரதிநிதிகளிடம் பெற்றோர் நேரடியாக விளக்கம் பெற்றனர். நேற்றைய நிகழ்ச்சியில், பேராசிரியர் ரமா வைத்ய நாதன், சட்ட நிபுணர் என்.பாலு, கல்வி நிறுவனர் பி.ஸ்ரீராம் மற்றும் பிரபல கல்வி ஆலோசகர் டி.நெடுஞ்செழியன், பேராசிரியர்கள் அலமேலு, கிருஷ்ணன், பாலாஜி ஆகியோர், பல்வேறு பட்டப் படிப்புகள், நுழைவுத் தேர்வுகள் மற்றும் படிப்புகளுக்கான வேலைவாய்ப்புகள் குறித்து, பவர் பாயின்ட் பிரசன்டேஷன் மூலம் விளக்கமாக எடுத்துரைத்தனர். கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன், நுாற்றுக்கணக்கான நுழைவுத் தேர்வுகள் குறித்து கூறி, மாணவர் மற்றும் பெற்றோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சி, மூன்றாவது நாளான இன்றுடன் சென்னையில் நிறைவடைகிறது. இன்றும், கல்வியாளர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று, பல்வேறு பாடப் பிரிவுகள் குறித்து பேச உள்ளனர். நிகழ்ச்சியின் இடையில், பொது அறிவு குறித்த கேள்விகள் கேட்கப்பட்டு, சரியான பதில் கூறும் மாணவர்களுக்கு, வாட்ச், டேப்லெட் பரிசாக வழங்கப்படுகின்றன. நிகழ்ச்சிக்கு வரும் அனைத்து மாணவர்களுக்கும், கல்லுாரிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர்கல்வி தகவல் கள் அடங்கிய, தினமலர் நாளிதழின் வழிகாட்டி புத்தகம் இலவசமாக வழங்கப்படும்.