உள்ளூர் செய்திகள்

சட்டக் கல்லுாரி மாணவர்கள் 10 நாட்களாக நடத்தி வந்த போராட்டம் வாபஸ்

பாரிமுனை: சட்டக் கல்லுாரி மாணவர்கள், கடந்த, 10 நாட்களாக நடத்தி வந்த போராட்டம், நேற்று மாலை வாபஸ் பெறப்பட்டது. சென்னை, உயர் நீதிமன்றம் அருகில் உள்ள சட்டக் கல்லுாரியை இரண்டாக பிரித்து, காஞ்சி மற்றும் திருவள்ளூருக்கு இடமாற்றம் செய்யப் போவதாக தகவல் பரவியது. இதையடுத்து, கல்லுாரியை இடமாற்றம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தி, கல்லுாரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த, 10 நாட்களாக நடந்த போராட்டத்தில், நேற்று மாணவியர் சிலர், உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினர். நேற்று முற்பகலில், மாணவர்கள் சிலர் வழக்கறிஞர்களுடன் இணைந்து, அரசை கண்டித்தும், கல்லுாரியை இடமாற்றம் செய்யக்கூடாது என, வலியுறுத்தியும், கண்டன பேரணி செல்ல முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து, கைது செய்தனர். இந்த நிலையில், நேற்று மாலையில், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக, சட்டக் கல்லுாரி மாணவர்கள் அறிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "கல்லுாரியை இடமாற்றம் செய்யக்கூடாது என்பதே, எங்கள் நோக்கம். நீதிமன்ற அறிவுரையை ஏற்று, போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம். நீதிமன்றத்தின் மூலமாக, சட்டக் கல்லுாரி இடமாற்றத்தை தடுத்து நிறுத்துவோம். அடுத்த கட்ட போராட்டத்தை, மற்ற கல்லுாரி மாணவர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்போம்" என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்