வாசிப்பை நேசிக்க வைத்த 10 நாட்கள்: ஊட்டி புத்தகத் திருவிழா நிறைவு
ஊட்டி: ஊட்டியில், 10 நாட்கள் நடந்த புத்தகத் திருவிழா நிறைவடைந்தது.நீலகிரி மாவட்ட நிர்வாகம் பொது நுாலகத்துறை மற்றும் அப்பாச்சி சார்பில், ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், நான்காவது புத்தகத் திருவிழா, கடந்த 25ம் தேதி துவங்கி, 10 நாட்கள் நடந்தது.இதில், 20க்கும் மேற்பட்ட அரங்குகளில், ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டன. நாள்தோறும், காலை 10 மணி முதல், இரவு ஏழு மணி வரை, இரண்டு பகுதிகளாக எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் உட்பட, முக்கியஸ்தர்களின் சிறப்புரை இடம்பெற்றது.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், '3டி' எனும் முப்பரிமாண கோளரங்கம், டெலஸ்கோப் வாயிலாக வான் நோக் குதல், மாவட்ட சூழல் மற்றும் வனம் சார்ந்த புகைப்பட படைப்புகள் அனைவரையும் கவர்ந்தன.பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, சனிக்கிழமை வெளிப்பாடு போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. புத்தகத் திருவிழாக்கு வந்த பள்ளி மாணவர்கள், ஏராளமான புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.புத்தகத் திருவிழா நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார். அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் பேசுகையில், ''நீலகிரி மாவட்டம் நிர்வாகம் பொது நூலகத்துறை சார்பில் நடந்த, 4வது புத்தகத் திருவிழாவில், மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். மாணவர்களின் வாசிப்பு திறன் மேம்படும். புத்தகத் திருவிழா தொடர்ந்து நடத்தப்படும்,'' என்றார்.நீலகிரி எஸ்.பி., நிஷா, டி.ஆர்.ஓ., நாராயணன், மாவட்ட நூலக அலுவலர் கிளமெண்ட், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.