உள்ளூர் செய்திகள்

அமைப்பு சார்ந்த துறையில் 11 லட்சம் பணி வாய்ப்புகள்

ஒரு நாட்டில் உள்ள வங்கி, காப்பீடு, விமான சேவைகள், மருத்துவத்துறை போன்ற முறைப்படுத்தப்பட்ட துறைகளில் பணியாற்றுபவர்களை ஆர்கனைஸ்டு ஒர்க்கர்ஸ் என்று கூறுகிறார்கள். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் மிகக் குறைந்த சதவிகிதத்தினரே இந்த அமைப்பு சார்ந்த துறைகளில் பணியாற்றி வருகிறார்கள். எஞ்சியவர்கள் அன்ஆர்கனைஸ்டு செக்டார் எனப்படும் அமைப்பு சாராத துறைகளிலேயே பணி புரிந்து வருகிறார்கள். மாபோய் என்ற மனிதவள ஆராய்ச்சி நிறுவனம் இந்தியாவிலுள்ள பணி வாய்ப்புகள் குறித்த கள ஆய்வு ஒன்றினை 13 துறைகள் உள்ளிட்ட 662 நிறுவனங்களுக்கிடையே சமீபத்தில் நடத்தியது. இந்த ஆய்வு இந்தியாவின் புது டில்லி, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட முக்கிய 8 நகரங்களில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகளில் சில இங்கே தரப்படுகின்றன. இந்த ஆண்டில் இந்தியாவின் அமைப்பு சார்ந்த துறைகளில் மட்டும் மொத்தம் 11.34 லட்சம் பணி வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. ஹெல்த் கேர், ரியல் எஸ்டேட், கட்டுமானம் ஆகிய துறைகளில் ஏற்பட்ட அபரிமித வளர்ச்சியின் காரணமாக இந்த புதிய பணி வாய்ப்புகள் தோன்றியுள்ளன. இந்தியாவின் அமைப்பு சார்ந்த துறை கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் 7 லட்சத்து 39 ஆயிரத்து முப்பத்தி நான்கு பணி வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் இன்னமும் 3 லட்சத்து 94 ஆயிரத்து 700 புதிய பணி வாய்ப்புகள் தோன்றும் வாய்ப்புகள் உள்ளது. ஹெல்த்கேர் துறை மட்டும் இதுவரை 2 லட்சத்து 60 ஆயிரத்து ஐம்பத்தி இரண்டு பணி வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஐ.டி., மற்றும் ஐ.டி.இ.எஸ்., துறைகள் 1 லட்சத்து 16 ஆயிரத்து 700 பணி வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. இந்த ஆண்டின் துவக்கத்தில் எதிர்பார்க்கப்பட்டதைவிட மிக அதிக எண்ணிக்கையில் அமைப்பு சார்ந்த துறைப் பணி வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும், இந்த எண்ணிக்கை இந்த நிதியாண்டின் இறுதிக்குள் இன்னமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணி வாய்ப்புகள் அதிகரிப்பதோடு இந்தியப் பணியாளர்களின் மாத வருமானமும் கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக மாபோய் நிறுவனம் கூறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்