உள்ளூர் செய்திகள்

ஜவுளி துறையின் மதிப்பு ரூ.12 லட்சம் கோடியை தாண்டியது: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடில்லி: 2014ல், இந்திய ஜவுளி துறையின் மதிப்பு, 7 லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவாக இருந்தது. ஆனால், தற்போது ரூ.12 லட்சம் கோடியை தாண்டியுள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.மத்திய ஜவுளி வர்த்தக அமைச்சகம் சார்பில், டில்லியில் உள்ள பாரத் மண்டபம், யாஷ் பூமி ஆகிய கண்காட்சி வர்த்தக மையத்தில், பாரத் டெக்ஸ் - 2024 இன்று (பிப்.,26) துவங்கி வரும் மார்ச் 1 வரை நடக்கிறது. பிரதமர் மோடி இந்த கண்காட்சியை திறந்து வைத்தார்.கண்காட்சியில், நாடு முழுவதுமுள்ள ஜவுளி துறையினர் தங்கள் நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தினர். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 3000 கண்காட்சியாளர்கள், 40,000 வர்த்தக பார்வையாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.பருத்தி, சணல் மற்றும் பட்டு உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. லட்சக்கணக்கான விவசாயிகள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று அரசு லட்சக்கணக்கான பருத்தி விவசாயிகளை ஆதரித்து, அவர்களிடமிருந்து லட்சம் குவிண்டால் பருத்தியை கொள்முதல் செய்கிறது. அரசால் துவங்கப்பட்ட கஸ்தூரி பருத்தி இந்தியாவின் சொந்த அடையாளத்தை உருவாக்குவதற்கான ஒரு பெரிய முயற்சியாக இருக்கும்.ஜவுளித் துறையில் நிலையான மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசின் முயற்சிகளின் விளைவாக நேர்மறை தாக்கங்கள் நன்றாகவே காணப்படுகின்றன. 2014ல், இந்திய ஜவுளி துறையின் மதிப்பு, 7 லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவாக இருந்தது. ஆனால், தற்போது ரூ.12 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், நூல், துணி மற்றும் ஆடை உற்பத்தியில் 25 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது. ஜவுளித் துறையில் தரக் கட்டுப்பாட்டில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்