நோட்டு புத்தகம் விலை 15 சதவீதம் குறைவு
சிவகாசி: பேப்பர் விலை குறைவால் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு நோட்டு புத்தகம் விலை 15 சதவீதம் குறைந்துள்ளது.பட்டாசு, தீப்பெட்டி போலவே அச்சகத்திற்கும் புகழ்பெற்ற சிவகாசி பகுதியில் 50 க்கும் மேற்பட்ட நோட்டு புத்தகம் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. பள்ளி துவங்க சில நாட்களே உள்ள நிலையில் இங்கு நோட்டு புத்தகம் தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 20 பக்கம் முதல் 320 பக்கங்கள் கொண்ட 120 வகையிலான நோட்டு புத்தகம் பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் மொத்த உற்பத்தியில் சிவகாசியில் இருந்து 30 சதவீதம் உற்பத்தியாகிறது.சிவகாசியிலிருந்து புதுச்சேரி, கேரளாவிற்கு அனுப்பப்படுகின்றது. ஆண்டுதோறும் சிவகாசியில் ரூ.150 கோடி வரை வியாபாரம் நடக்கிறது. கடந்த காலங்களில் ஆண்டுதோறும் நோட்டு புத்தகம் விலை ஏறிச் சென்ற நிலையில் இந்த ஆண்டு மூலப் பொருளான பேப்பர் விலை குறைவால் நோட்டு புத்தகம் விலையும் குறைந்துள்ளது.சென்ற ஆண்டு ஒரு டன் பேப்பர் விலை ரூ.1.15 லட்சமாக இருந்தது. இந்த ஆண்டு ஒரு டன் ரூ. 85 ஆயிரமாக குறைந்துள்ளது. இதனால் நோட்புக்கின் விலையும் 15 சதவீதம் விலை குறைந்துள்ளது. தற்போது சிவகாசியில் நோட்டு புத்தகம் உற்பத்தி பணி இறுதிக்கட்டத்தை எட்டி தீவிரமாக நடந்து வருகின்றது. மொத்த வியாபாரம் முடிந்துள்ள நிலையில் பள்ளி, கல்லுாரிகள் திறந்தவுடன் சில்லறை வியாபாரம் துவங்கும்.ஏ.மாரிராஜன், சீமா நோட்புக் உரிமையாளர், சிவகாசி: மூலப் பொருள்களில் ஒன்றான பேப்பர் விலை மட்டும் குறைந்துள்ளது. மற்ற மூலப் பொருட்களின் விலை குறையவில்லை. ஆனாலும் நோட்டு புத்தகம் விலை 15 சதவீதம் குறைந்து விட்டது. நேரடியாகவும், ஆர்டரின் பேரிலும் 90 சதவீத மொத்த வியாபாரம் முடிந்து விட்டது என்றார்.