நெல்லை கல்லுாரி முதல்வரிடம் ரூ.17 லட்சம் ஆன்லைன் மோசடி
திருநெல்வேலி: திருநெல்வேலி பெண்கள் கல்லுாரி முதல்வரிடம், ஆன்லைனில் 17.89 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.திருநெல்வேலி, பெருமாள்புரத்தை சேர்ந்தவர் ரஜப்பாத்திமா, 61; மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லுாரி முதல்வர். கடந்த ஜூனில், 'டிஜிட்டல் மார்க்கெட்டிங் வேலை வாய்ப்பு' என்ற பெயரில், 'டெலிகிராம் வழியாக பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்' என மர்மநபர்கள் தெரிவித்தனர்.அதை நம்பி மூன்று வங்கி கணக்குகள் வைத்திருக்கும் ரஜப்பாத்திமா, முதலில், 15,000 ரூபாய் அனுப்பினார். அதற்கு லாபம் எனக்கூறி, 9,500 ரூபாயை அந்த நிறுவனம் அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பியது.அதை நம்பி, வெவ்வேறு கணக்குகளில் அவர்கள் கூறிய, 'ஜிபே' எண்களில் ரஜப்பாத்திமா பணம் செலுத்தி வந்தார். அவரது தங்கை வங்கி கணக்கு மூலமும் அவர் பணம் செலுத்திஉள்ளார். பல தவணைகளாக, 17 லட்சத்து 89,000 ரூபாய் செலுத்தினார்.ஆனால், மர்ம நபர்கள் அவருக்கு லாப பணம் தராமல் ஏமாற்றினர். அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.