உள்ளூர் செய்திகள்

அரசு கல்லுாரிகளில் 20 சதவீதம் அதிகரிப்பு

சென்னை: கலை அறிவியல் கல்லுாரிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.அவர் அளித்த பேட்டி:அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கு 1.07 லட்சம் இடங்கள் உள்ளன. இதற்கு 2.47 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நேற்று வரை 80,084 இடங்கள் நிரப்பப்பட்டு, மீதம் 27,215 இடங்கள் உள்ளன. விண்ணப்பித்துள்ள மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் 30ம் தேதி வரை சேர்க்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போலவே அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் 20 சதவீதம், உதவி பெறும் கல்லுாரிகளில், 15 சதவீதம், சுயநிதி கல்லுாரிகளில் 10 சதவீதம் அளவுக்கு தற்போதுள்ள இடங்களை விட கூடுதலாக மாணவர்களை சேர்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லுாரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள், ஜூலை 3ல் துவங்கும். 4ம் தேதி முதல் நான்கு நாட்கள், வராண்டா அட்மிஷன் முறையில் மாணவர் சேர்க்கை நடக்கும். அதன் பின்னும் காலியிடங்கள் ஏற்பட்டால் அதிலும் மாணவர்களை சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்கலாம்அரசு கலை அறிவியல் கல்லுாரிகள், கல்வியியல் கல்லுாரிகளில், 5,699 கவுரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணி அமர்த்தவும் அவர்களுக்கு மாத ஊதியமாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த கல்வியாண்டில் அரசு கலை அறிவியல் கல்லுாரி கல்வியியல் கல்லுாரிகளில் 2,423 கவுரவ விரிவுரையாளர்கள் 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரை பணிபுரிய தொகுப்பூதிய அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு மாத ஊதியமாக, 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அதன்பின் 1,895 கவுரவ விரிவுரையாளர்கள், 2022 டிசம்பர் முதல் 2023 ஏப்ரல் வரை, ஐந்து மாதங்களுக்கு நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கும் மாத ஊதியமாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அதேபோல் பல்கலை உறுப்பு கல்லுாரிகளாக இருந்து அரசு கல்லுாரிகளாக மாற்றப்பட்ட 41 அரசு கல்லுாரிகளுக்கு 1,381 கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.இவற்றையும் சேர்த்து இம்மாதம் முதல் 2024 மார்ச் வரை பணிபுரிய 5,699 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்கவும், அவர்களுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கவும் அனுமதி கோரி கல்லுாரிக் கல்வி இயக்குனர், அரசுக்கு கருத்துரு அனுப்பினார். அதை பரிசீலனை செய்த அரசு 11 மாதங்களுக்கு கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்கவும், அவர்களுக்கு தொகுப்பூதியம் வழங்க 125.37 கோடி ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்தும், அரசாணை வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்