சென்னை புத்தகக்காட்சியில் ரூ.20 கோடிக்கு விற்பனை
சென்னை: சென்னை புத்தகக் காட்சியில், 20 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளதாக, பபாசி தெரிவித்துஉள்ளது.தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான பபாசியின் சார்பில், சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், 17 நாட்கள் நடந்த 48வது சென்னை புத்தகக்காட்சி, நேற்றுடன் நிறைவடைந்தது.மொத்தம் 900 அரங்குகளில் 20 லட்சம் வாசகர்கள் வந்ததாகவும், 20 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையானதாகவும், 'பபாசி' தெரிவித்து உள்ளது.நேற்றைய நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன், பதிப்புத் துறையில் 100, 50, 25 ஆண்டுகளை நிறைவு செய்த பதிப்பாளர்களை வாழ்த்தி, நினைவுப்பரிசுகளை வழங்கினார்.அப்போது அவர் பேசியதாவது:புத்தகங்களோடு இணைந்து வாழ்கிறவர்கள், வாழ்வின் உன்னதத்தை அடைகின்றனர். வரலாற்றின் நிகழ்விடங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும் வல்லமை புத்தகங்களுக்கு உண்டு.அறிவுசார் சமூகத்தின் அடையாளங்களாக புத்தகங்கள் உள்ளன. புத்தகங்கள் பொருள் அல்ல; அவை வாழ்க்கையின் அற்புதங்கள்.மனதில் உன்னத எண்ணங்களை உருவாக்கி, வாழ்க்கையில் வரக்கூடிய இன்ப துன்பங்களை, அதனதன் தன்மையோடு நமக்கு எடுத்துக் கூறுபவை புத்தகங்கள் மட்டுமே. நமக்கு நம்மை அடையாளப்படுத்துபவை புத்தகங்கள்தான்.இவ்வாறு நீதிபதி மகாதேவன் பேசினார்.கடந்தாண்டு, பபாசி சென்னையில் நடத்திய புத்தக காட்சியில் 18 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்றன. இந்தாண்டு அதைவிட 10 சதவீதம் அதிகரித்து 20 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்றுள்ளன.