பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களை தடை செய்தது நேபாளம்!
காத்மாண்டு: நேபாளத்தில் 26 சமூக வலைதளங்களுக்கு அந்நாட்டு அரசுதடை விதித்து உத்தரவிட்டது. இதன்படி பேஸ்புக், இன்ஸ்டா மற்றும் எக்ஸ் (டுவிட்டர்) தளங்களுக்கு இன்று முதல் தடை அமலுக்கு வந்தது.நேபாளத்தில் உள்நாட்டு விதிமுறைகளின்படி பதிவு செய்யத் தவறியதற்காக, பேஸ்புக், எக்ஸ் (டுவிட்டர்), இன்ஸ்டா மற்றும் யூடியூப் போன்ற முக்கிய சமூக வலைதளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதனை, நேபாள தகவல் தொடர்பு மற்றும் தகவல் துறை அமைச்சர் பிருத்வி சுப்பா குருங் உறுதிப்படுத்தினார்.நேபாளத்தில் தங்கள் நிறுவனங்களை பதிவு செய்து, உள்ளூர் தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டுமென பலமுறை சமூக வலைதளங்களுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதற்கு சமூக வலைதள நிறுவனங்கள் எந்த பதிலும் அளிக்காத நிலையில் இன்று 26 சமூக வலைதளங்களுக்கு தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.டிக்டாக் மற்றும் வைபர் உள்ளிட்ட 5 சமூக வலைத்தளங்கள், அரசின் விதிமுறைகளைப் பின்பற்றிப் பதிவு செய்துள்ளதால், அவை தொடர்ந்து நேபாளத்தில் செயல்படும். இரண்டு வாரங்களுக்கு முன்பு, நேபாளத்தின் உச்ச நீதிமன்றம் அனைத்து ஆன்லைன் மற்றும் சமூக ஊடக தளங்களும் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு அதிகாரியிடம் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்குகிறது.கிளம்பியது விமர்சனங்கள்!26 சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது விமர்சனங்களை கிளப்பியுள்ளது. எதிரிகளை மவுனமாக்கவும், கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்தவும் நோக்கம் கொண்டது என்று பல்வேறு தரப்பினர் தெரிவித்து உள்ளனர்.