ஒரு உதவியாளர் பணிக்கு 260 பேர் போட்டி பிஎச்.டி., முடித்தவர்களும் வந்ததால் அதிர்ச்சி
பல்லடம்: பல்லடம் ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரே ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு, 8ம் வகுப்பு கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், பிஎச்.டி., முடித்தவர்கள் வரை, 260 பேர் விண்ணப்பித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அலுவலக உதவியாளர் பணியிடம் ஒன்று காலியாக உள்ளது. இதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இப்பணிக்கு, குறைந்தபட்ச கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு; விண்ணப்பதாரர் 18 - 34 வயதினராக இருக்க வேண்டும்.இதற்கு மொத்தம், 260 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 12 பேர் பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள்; 161 பேர் இளங்கலை, முதுகலை படித்தவர்கள்; இன்னும் சிலர் எம்.பில் - பிஎச்.டி., முடித்தவர்கள். சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, சேலம், நாமக்கல், திருப்பத்துார், சிவகாசி, கன்னியாகுமரி, சத்தியமங்கலம், பழனி, தாராபுரம், பல்லடம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் இப்பணியிடத்துக்கு விண்ணப்பித்திருந்தனர்.நேற்று நடந்த விண்ணப்பங்கள் சரிபார்ப்பில், 173 பேர் மட்டும் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள், அலுவலக நடைமுறை மற்றும் பணியமைப்பு தொடர்பாக அறிந்துள்ளனரா; தமிழ் மொழியில் வாசிக்கும் மற்றும் எழுதும் திறன் உள்ளதா என, பரிசோதிக்கப்பட்டது.விண்ணப்பதாரர்கள் சைக்கிள் ஓட்டிக்காட்டினர். இதற்காக, இரண்டு சைக்கிள்கள் வாடகைக்கு தருவிக்கப்பட்டிருந்தன. தகுதியானவர்களுக்கு, அக்., 27 முதல் நவ., 4ம் தேதி வரை நேர்காணல் நடத்தப்பட உள்ளது. இதில் தேர்வு செய்யப்படுபவருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.