சந்திரயான் - 3 திட்டத்தில் நாமக்கல் மாவட்ட நீதிபதி மனைவி
நாமக்கல்: சந்திரனில் கால் பதித்து சரித்திர சாதனை படைத்தது சந்திரயான் - 3. இது உலக நாடுகளை இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.இந்த திட்டத்தில் நாமக்கல் மாவட்ட மண்ணும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சந்திரயான் - 3 நிலவில் கால் பதித்ததையடுத்து, ப.வேலுார் அடுத்த குன்னமலை, சித்தம்பூண்டி, ராமதேவம் கிராம மக்கள், கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.இந்த திட்டத்தில் செயற்கைக்கோள் மையத்தின் இயக்குனர் சங்கரன், திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் ஆகியோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அதேபோல், சந்திரயான் - 3 திட்டத்தில் பூமியில் இருந்து ராக்கெட் வாயிலாக சந்திரனுக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள், சந்திரனின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படுவதற்கான ஆர்பிட்டர், சந்திரனில் கால் பதிப்பதற்கான லேண்டெர் மற்றும் சந்திரனை ஆய்வு செய்யும் ரோவர் ஆகியவை மிக முக்கியமானது.இவை மூன்றையும், பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இயக்குவதற்கான ஆணைகளை பிறப்பிக்கும், டெலி கமாண்ட் சாப்ட்வேர் வடிவமைப்பாளராக செயல்பட்டவர், பழநி அடுத்த கணக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த கவுரிமணி, 50. இவர், 23 ஆண்டுகளாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், செயற்கைக்கோள் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். இவர் தொலைத் தொடர்பு பொறியியலில் எம்.இ., பட்டத்தை, மதுரை தியாகராஜா கல்லுாரியில் பயின்றுள்ளார். இவரது கணவர் ராமராஜ், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.