உள்ளூர் செய்திகள்

காலி இடங்களை நிரப்ப ஆக.30ல் இன்ஜினியரிங் சிறப்பு கவுன்சிலிங்

கவுன்சிலிங் முடிவில் 8 ஆயிரத்து 68 இடங்கள் காலியாக உள்ளன. கடந்த ஆண்டில் 10,511 இடங்கள் காலியாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது கடந்த ஆண்டில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் கவுன்சிலிங்கிற்கு இருந்த இடங்களின் எண்ணிக்கை 66,507. இந்த ஆண்டில் புதிய இன்ஜினியரிங் கல்லூரிகள் தொடங்கப்பட்டதால் கவுன்சிலிங்கிற்கான இடங்களின் எண்ணிக்கை 82,049 ஆக அதிகரித்துள்ளது. எனினும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள காலி இடங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.   இந்த கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள 1 லட்சத்து 15 ஆயிரத்து 574 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 74 ஆயிரத்து 332 மாணவர்கள் கல்லூரிகளில் சேர அட்மிஷன் ஆணை பெற்றனர். இந்த கவுன்சிலிங்கில் 41, ஆயிரத்து 240 பேர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 27ம் தேதி நடைபெறும் துணை கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள 817 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 500 இடங்கள் வரை பூர்த்தியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கவுன்சிலிங் முடிவில் மொத்தத்தில் 7 ஆயிரத்து 500 இடங்கள் காலியாக இருக்கும். இந்த காலி இடங்களை நிரப்புவதற்காக சிறப்பு கவுன்சிலிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலிங் ஆகஸ்ட் 30ம் தேதி நடைபெறும் என்று இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைப் பிரிவு செயலர் ரேமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார். இதுவரை கவுன்சலிங்கிற்கு விண்ணப்பிக்காத யாரும் இதில் கலந்து கொள்ளலாம்.  ஏற்கெனவே கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு கல்லூரிகளைத் தேர்வு செய்தவர்கள் இந்த சிறப்புக் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள முடியாது. தொழிற் கல்வி பாடப்பிரிவிற்கான கவுன்சலிங்கிற்கு விண்ணப்பித்து இதுவரை கவுன்சலிங்கிற்கு அழைக்கப்படாத மாணவர்களும் இந்த கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம். இந்த சிறப்பு கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள விரும்பும் தகுதியுடைய மாணவர்கள் தங்களது அனைத்துச் சான்றிதழ்களுடனும் காலை 8 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுன்சிலிங் நடைபெறும் இடத்துக்கு வர வேண்டும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்