ஜாதிவாரி சர்வே அக்., 31 வரை நீட்டிப்பு ஆசிரியர்களை விடுவித்து உத்தரவு
பெங்களூரு: எதிர்பார்த்தபடி ஜாதிவாரி சர்வே பணி குறிப்பிட்ட காலத்துக்குள் முடியாததால், அக்., 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இப்பணியில் ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கவும், பிற துறைகளை சேர்ந்த ஊழியர்களை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.ஜாதிவாரி சர்வே முன்னேற்ற மதிப்பாய்வு கூட்டம், முதல்வரின் அலுவலக இல்லமான கிருஷ்ணாவில், நேற்று முன்தினம் இரவு, முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்தது.98 சதவீதம் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள்:கர்நாடகாவின் பெரும்பாலான மாவட்டங்களில் 95 - 98 சதவீதம் சர்வே நட த்தப்பட்டு உள்ளது. பெங்களூரு தெற்கு, பீதர், தார்வாட் ஆகிய மாவட்டங்களில் 86 - 89 சதவீதம் மட்டுமே பதிவாகி உள்ளன. பெங்களூரில் மிகவும் குறைந்த அளவு சர்வே செய்யப்பட்டு உள்ளது.தீபாவளி காரணமாக, நாளை (22ம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அக்., 23 முதல் 31ம் தேதி வரை மீண்டும் சர்வே நடத்த முடிவு செய்யப்பட்டது.விடுமுறைக்கு பின் பள்ளிகள் துவங்க உள்ளதால், ஆசிரியர்கள், சர்வேயில் பங்கேற்க மாட்டார்கள். இதில் ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு பதிலாக, பிற துறைகளை சேர்ந்த ஊழியர்களை பயன்படுத்த, கலெக்டர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.நீட்டிப்புகூட்டத்துக்கு பின், அமைச்சர் சிவராஜ் தங்கடகி அளித்த பேட்டி:அனைத்து மாவட்டங்களிலும் அக்., 19 வரை நடந்த சர்வேயில் ஆசிரியர்கள் பங்கேற்றனர். இனி அவர்கள் இந்த சர்வேயில் பங்கேற்க மாட்டார்கள். அவர்களுக்கு பதிலாக வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் நடத்துவர். அக்., 31க்குள் ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சர்வே முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.அனைத்து மாவட்டங்களிலும் 100 சதவீதம் சர்வே நடத்தப்படும். அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் பங்கேற்க வேண்டும். பெங்களூரு எம்.எல்.ஏ.,க்களுக்கு முதல்வர் அறிவுறுத்துவார். பெங்களூரில் சர்வே தாமதமாக துவங்கியதால், பணிகள் தொடருகிறது.7 கோடி மக்கள் இது பிற்படுத்தப்பட்டோருக்கான சர்வே அல்ல. மாநிலத்தின் ஏழு கோடி மக்களின் சர்வே. பின் தங்கியவர்களின் கல்வி, சமூக, பொருளாதார நிலை குறித்து செய்யப்படுகிறது. பொறுப்பான பதவியில் இருப்பவர்கள், பொறுப்புடன் செயல்பட வேண்டும்.மத்திய அரசு மக்கள் தொகை சர்வே நடத்தினால், தங்கள் விபரங்களை இவர்கள் தெரிவிக்க மாட்டார்களா. இதில் பங்கேற்க முடியாது என்று சொல்ல முடியுமா. அவர்களின் மனநிலை என்ன என்று மக்கள் புரிந்து கொண்டனர்.சுதாமூர்த்தி, பிரஹலாத் ஜோஷி, தேஜஸ்வி சூர்யா ஆகியோர் பொறுப்பான பதவியில் உள்ளவர்கள். இது, சமூகத்திற்கு மட்டுமேயான சர்வே அல்ல. அனைத்து சமூகங்களின் சர்வே.இவ்வாறு அவர் கூறினார்.