அங்கன்வாடி கூரை விழுந்து 4 குழந்தைகள் காயம்
கொப்பால்: அங்கன்வாடி மையத்தின் சிமென்ட் கூரை பெயர்ந்து விழுந்ததில், நான்கு குழந்தைகள் காயமடைந்தனர்.கொப்பால் மாவட்டம், கங்காவதியில் ஹெமபூப் நகரில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். நேற்று காலை வழக்கம் போல் குழந்தைகளுக்கு, ஆசிரியை ஹசீனா பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். 10:30 மணியளவில் திடீரென்று மையத்தின் கூரை பெயர்ந்து விழுந்தது.இதில், அமன், மன்வித், மதன், சரக் ஷா ஆகிய குழந்தைகள் காயமடைந்தனர். அதிர்ச்சியடைந்த அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்கள் உடனடியாக குழந்தைகளை வெளியேற்றி, காயமடைந்தவர்களை கங்காவதி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.சிகிச்சைக்கு பின், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்த பெற்றோர், மருத்துவமனைக்கு சென்று, தங்கள் குழந்தைகளை பார்த்துக் கொண்டனர்.பேரூராட்சி தலைவர் மவுலாசாப், வார்டு கவுன்சிலர் மனோகரசாமி, முதன்மை செயல் அதிகாரி ஜெயஸ்ரீ தேசாய், மேற்பார்வையாளர் சந்திரம்மா உட்பட அதிகாரிகளும் மருத்துவமனைக்கு சென்று குழந்தைகளிடம் நலம் விசாரித்தனர்.அப்போது பெற்றோர், மெஹபூப் நகரில் உள்ள அங்கன்வாடி மையம், பழமையான கட்டடம் அல்ல. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தான் கட்டப்பட்டது.ஏழாண்டிற்குள் கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்ததை பார்த்தால், பணியின் தரத்தில் சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு காரணமான ஒப்பந்ததாரர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.பெயர் குறிப்பிட விரும்பாத அங்கன்வாடி ஊழியர் ஒருவர் கூறியதாவது:கர்நாடகாவில் அங்கன்வாடி பணியாளர்கள், ஊழியர்களுக்கு நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. முட்டை கொள்முதல் செய்யவும் பணம் வழங்கவில்லை. சொந்த பணத்தில் காய்கறிகள் வாங்கி, குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கி வருகிறோம்.இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியில், அங்கன்வாடி மைய கட்டடங்களும் நல்ல நிலையில் இல்லை. இச்சூழ்நிலையில், பெற்றோர் எப்படி தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவர்? அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.