குரூப் - 4 கவுன்சிலிங் 1,918 பேருக்கு வேலை
குரூப் - 4 பணி நியமன கவுன்சிலிங், 20ம் தேதி துவங்கியது; ஆக., 20 வரை நடக்கிறது. முதல் கட்டமாக, வி.ஏ.ஓ. என்ற கிராம நிர்வாக அதிகாரி பதவியில், 425; இளநிலை உதவியாளர், 5,256; வரி வசூலிப்பாளர், 69; கள உதவியாளர், 20 மற்றும் கிடங்கு காப்பாளர் 1 ஆகிய இடங்கள் நிரப்பப்படுகின்றன. நான்காம் நாள் முடிவில் நேற்று, வி.ஏ.ஓ., என்ற கிராம நிர்வாக அலுவலர் பதவியில், 101 காலியிடங்களும், மற்ற பதவிகளில், 3,742 இடங்களும் காலியாக உள்ளன.கல்லுாரி கல்வி இயக்குனரகம், வேலைவாய்ப்பு பயிற்சி இயக்குனரகம், வனத் துறை, போலீஸ், ஊரக மருத்துவ சேவை, பொது சுகாதாரம், பள்ளிக் கல்வி, சமூக நலத் துறை பணியிடங்களை தேர்வு செய்வதில், யாரும் ஆர்வம் காட்டவில்லை. வருவாய், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், மாவட்ட நீதிமன்றங்கள் போன்ற மாவட்ட அளவிலான பணிமூப்பை பின்பற்றும் துறைகளில் பணியாற்ற, தேர்வர்கள் ஆர்வம் காட்டுவதால், அந்த துறைகளில் காலியிடங்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து உள்ளது.இதுகுறித்து தேர்வர்கள் கூறுகையில், மாவட்ட அளவில் பணிமூப்பு பின்பற்றும் துறைகளில், பணி வாய்ப்பு பெற்றால், வேறு மாவட்டத்துக்கு மாறுதல் பெறாமல், கடைசி வரை பணியாற்றலாம். பதவி உயர்வும் அதே மாவட்டத்திலேயே பெற முடியும் என்றனர்.