ஒரு மாணவனின் சத்துணவுக்கு 43.5 காசு மட்டுமே
இதனால், மாணவர்களுக்கு முழுமையான மற்றும் தரமான சத்துணவு வழங்கப்படுகிறதா என்ற கேள்வியெழுந்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 42 ஆயிரத்து 78 சத்துணவு மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் 56 லட்சத்து 41 ஆயிரத்து 502 மாணவ, மாணவிகள் மதிய உணவு சாப்பிடுகின்றனர். இவர்களுக்கு அரிசி சாதத்துடன் காய்கறிகள் கலந்த சாம்பாருடன் சாப்பாடு வழங்கப்படுகிறது. திங்கள், புதன், வியாழன் ஆகிய மூன்று தினங்களில் மதிய உணவுடன் சேர்த்து முட்டை வழங்கப்படுகிறது. செவ்வாய் கிழமை உருளைக் கிழங்கும், வெள்ளிக் கிழமை கொண்டைக்கடலை அல்லது பச்சைப்பயறு வேக வைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. சத்துணவு திட்டத்துக்காக அரிசி, எண்ணெய் போன்றவை அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இது தவிர கடுகு, சீரகம் உள்ளிட்ட மசாலா பொருட்கள் வாங்க ஒரு மாணவனுக்கு என்ற கணக்கில், 8.5 காசும், காய்கறிகள் வாங்க 20 காசும், விறகு வாங்கிக் கொள்ள 15 காசும் என ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு மாணவனுக்கும் மொத்தமாக 43.5 காசு வழங்கப்படுகிறது. ஒரு சத்துணவு மையத்தில், 50 மாணவர்கள் இருக்கின்றனர் என்றால் அவர்களுக்கு காய்கறிகள், மசாலா பொருட்கள் மற்றும் விறகு என சேர்த்து மொத்தமாக 217 ரூபாய் 50 காசுக்குள் வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த தொகையை கொண்டு மாணவர்களுக்கு எப்படி சத்துணவு வழங்க முடியும் என்று சத்துணவு அமைப்பாளர்கள் புலம்புகின்றனர். சத்துணவு மையங்களின் தற்போதைய நிலைமை குறித்து சத்துணவு அமைப் பாளர் ஒருவரிடம் பேசியபோது: கடந்த 1982ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., ஆட்சியில் சத்துணவு திட்டம் அமல்படுத்தப்பட்டது. அப்போது, சத்துணவு மையங்களை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கான துடைப்பம், பினாயில்,சோப்பு வாங்க மாதம் 20 ரூபாய் ஒதுக்கப்பட்டது. 27 ஆண் டுகளாக இதே தொகை தான் தற்போதும் வழங்கப் படுகிறது. இதே போல் காய்கறிகள், விறகு மற்றும் மசாலா பொருட்கள் வாங்குவது தொடர்பாக 2007ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில், ஒவ்வொரு மாணவனுக்குமான காய்கறி, விறகு, மசாலா பொருட்களுக்கான செலவுத் தொகையாக 43.5 காசு ஒதுக்கீடு செய்யப் பட்டது. இதில் விறகு வாங்கிக் கொள்ள மட்டும் ஒரு மாணவனுக்கு 15 காசு ஒதுக்கப்பட்டது. இதை கொண்டு தான் அரிசி, சாம்பார், முட்டை மற்றும் உருளைக் கிழங்கு, பச்சைப்பயிறு போன்ற இணை உணவுகளையும் வேக வைத்துக் கொள்ள வேண்டும். இது எப்படி சாத்தியமாகும்? இந்தத் தொகையை கொண்டு மாணவர்களுக்கு சத்துணவு கொடுப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது. இதை உயர்த்தி தருமாறு அரசை கேட்ட பின்னரும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. மற்றொரு விஷயம், கிராமப்புறங்களில் ஊராட்சி அலுவலகங்களில் கொண்டு வந்து முட்டையை வட்டார வழங்கல் அதிகாரிகள் வைத்துவிடுவர். அவர்களே தான் சத்துணவு மையங்களுக்கு நேரிடையாக முட்டையை சப்ளை செய்ய வேண்டும். ஆனால், அவர்கள் முட்டையை சப்ளை செய்வது இல்லை. இது பற்றி, வட்டார வழங்கல் அதிகாரிகளிடம் கேட்டால், முட்டையை கொண்டு வந்து நேரிடையாக சத்துணவு மையங்களுக்கு சப்ளை செய்ய 1990ம் ஆண்டு ஒரு முட்டைக்கு 8 காசு பயண செலவாக அரசு ஒதுக்கீடு செய்தது. தற்போதும், இதே தொகை தான் வழங்கப்படுகிறது. இதை வைத்து, முட்டையை சத்துணவு மையங்களுக்கு சப்ளை செய்ய முடியாது. தேவைப் பட்டால், நீங்களே வந்து எடுத்துச் செல்லுங்கள் என்கின்றனர். வாரந்தோறும் செவ்வாய் கிழமை மதிய உணவுடன் சேர்த்து மாணவர்களுக்கு இணை உணவாக உருளைக் கிழங்கை வேக வைத்து கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனுக்கும் 20 கிராம் அளவு உருளைக் கிழங்கை கொடுக்க வேண்டும். ஒரு கிலோ உருளைக் கிழங்கை 8 ரூபாய் மற்றும் அதற்குள்ளாக வாங்கிக்கொள்ள வேண்டும் என்று 2001ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்தத் தொகையும் இன்று வரை உயர்த்தப்படவே இல்லை. அதனால், மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 20 கிராம் உருளைக் கிழங்கை குறைத்து வழங்க வேண்டிய வருத்தமான சூழ்நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆண்டுதோறும் அண்ணாதுரை, காமராஜர், எம்.ஜி.ஆர்., பிறந்தநாளின் போது சத்துணவு மைய மாணவர்களுக்கு சக்கரை பொங்கல் வழங்க வேண்டும் என்று அரசு சார்பில், 1991ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது. அப்போது பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், சர்க்கரை பொங்கல் செய்வதற்கு தேவையான சர்க்கரை, வெல்லம், டால்டா, ஏலக்காய் மற்றும் சுக்கு வாங்கிக்கொள்ள ஒரு மாணவனுக்கு 33 காசு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத் தொகையும் இன்னமும் உயர்த்தப்படாமலேயே உள்ளது. மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்க வேண்டிய சத்துணவு மையங்கள் பலவித காரணங்களால் சத்து குறைந்து போய் மெலிந்து காணப்படுகின்றன. இதை அரசு கண்டுகொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.