அமெரிக்காவில் ஒரே மாதத்தில் 5 லட்சம் பேர் வேலை இழப்பு!
1975ம் ஆண்டுக்குப் பிறகு, பொருளாதார நெருக்கடி காரணமாக பெரிய அளவிலான ஆட்குறைப்பு தற்போதுதான் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் மாதத்தில் 6.5 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை நவம்பர் மாதத்தில் 6.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. 1993ம் ஆண்டிலிருந்து இந்த வேலைவாய்ப்பின்மை இந்த அளவுக்கு இருந்ததில்லை என்பதையும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.மருத்துவம், கல்வி, அரசுத் துறை நீங்கலாக அனைத்துத் துறைகளிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சேவைத் துறைகளில்தான் ஆட்குறைப்பு நடவடிக்கை மிக அதிகமாக இருக்கிறது. நவம்பர் மாதத்தில் இத்துறையில் மட்டும் 3.7 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இதில் ரீடெய்ல் துறையில் மட்டும் 91 ஆயிரம் பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளனர். நிதித்துறை உள்ளிட்ட பிசினஸ் சேவைத் துறைகளில் 82 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். கட்டுமானத் துறையில் 82 ஆயிரம் பேரும் மானுபாக்சரிங் துறையில் 82 ஆயிரம் பேரும் வேலை இழந்துள்ளனர். அமெரிக்காவில் 154.6 மில்லியன் மக்கள் தொகையில் 10.3 மில்லியன் பேர் வேலையில்லாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை 8.7 சதவீதத்திலிருந்து 9.8 சதவீதமாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை அமெரிக்கா சந்தித்துள்ளதாக அமெரிக்கப் பொருளாதார நிபுணர் நிகில் கால்ட் தெரிவித்துள்ளார். இந்த நெருக்கடியைச் சமாளிக்க 900 பில்லியன் டாலர்கள் தேவைப்படும் என்பதையும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். வருகிற ஜனவரியில் புதிய குடியரசுத் தலைவராகப் பொறுப்பு ஏற்க உள்ள ஒபமா, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 25 லட்சம் வேலைகளை உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளார். எனினும், பொருளாதார நிலைமையைச் முழுமையாக உடனடியாகச் சரி செய்ய முடியாது என்பதையும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.