ஆசிரியை நியமன ஒப்புதல்: ரூ.500 அபராதம்
சென்னை: ஆசிரியை நியமனத்துக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக, 2016-ல் பிறப்பித்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரிய கல்வி துறை செயலருக்கு, 500 ரூபாய் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாகை மாவட்டம், ஆயக்காரம்புலம் கிராமத்தில் உள்ள, மஹாத்மா காந்தி அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக, 2015ல், வெண்ணிலா என்பவர் நியமிக்கப்பட்டார். இவரின் நியமனத்துக்கு ஒப்புதல் கேட்டு அனுப்பிய கோப்புகளை, மாவட்ட கல்வி அலுவலர் கிடப்பில் போட்டதோடு, ஒப்புதல் வழங்க காலதாமதமும் செய்தார். இதுகுறித்து, பள்ளி கல்வித் துறை இயக்குனர், இணை இயக்குனருக்கு, வெண்ணிலா புகார் மனு கொடுத்தார். பின், ஆசிரியை புகாரை விரைவாக பரிசீலிக்க, மாவட்ட கல்வி அலுவலருக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டனர்.இருப்பினும், ஒப்புதல் அளிக்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆசிரியை வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பணி நியமனம் தொடர்பான ஆவணங்களை பரிசீலித்து, எட்டு வாரத்துக்குள் முடிவு எடுக்க, 2016 டிச., 9ல் உத்தரவிட்டார். அதன் பின்னும் ஒப்புதல் அளிக்காததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, வெண்ணிலா தாக்கல் செய்தார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆறு வாரத்துக்குள் பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க பரிசீலிக்கும்படி, கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டது. அதன் பின்னரும் ஒப்புதல் கிடைக்காததால், ஆசிரியை 3வது முறையாக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி சி.சரவணன் முன் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், வெண்ணிலாவின் பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும்படி, 2016 டிச., 9ல் உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை, மறுஆய்வு செய்ய வேண்டும் என, உயர் நீதிமன்றத்தில், கல்வி துறை செயலர், பள்ளி கல்வித் துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள், மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுவை விசாரித்த, நீதிபதி சி.சரவணன் பிறப்பித்த உத்தரவு:ஆசிரியை பணி நியமனம் தொடர்பாக ஒப்புதல் வழங்குவது குறித்து, 2016ல் இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என, காலதாமதத்துடன் கல்வித் துறை செயலர் மனு தாக்கல் தாக்கல் செய்திருப்பதை ஏற்க முடியாது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் மழுப்பும் விதமாக செயல்பட்ட, கல்வி துறை செயலருக்கு, வழக்கு செலவு விதித்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். உயர் நீதிமன்ற சட்டப்பணி ஆணைக் குழுவுக்கு, கல்வித் துறை செயலர், 500 ரூபாயை, ஒரு வாரத்துக்குள் வழங்க வேண்டும். பணத்தை செலுத்திய ரசீதை காட்டிய பின், இந்த உத்தரவின் நகலை, அவருக்கு உயர் நீதிமன்ற பதிவுத் துறை வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.