உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் நலத் துறையில் 6 ஆண்டாக சி.இ.ஓ., பணியிடம் காலி

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி அளிப்பதை கண்காணிக்க வேண்டிய, சி.இ.ஓ., என்ற, முதன்மை கல்வி அதிகாரி பணியிடத்தை, தமிழக அரசு ஆறு ஆண்டுகளாக நிரப்பாமல் கிடப்பில் போட்டு உள்ளதால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.தமிழகத்தில், மாற்றுத்திறனாளிகள் துறை கட்டுப் பாட்டில், அரசின் சிறப்பு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் என, 140 பள்ளிகள் உள்ளன.இதுதவிர, அங்கீகாரம் பெற்றும், அரசு நிதி உதவி பெறாத, 81 சிறப்பு பள்ளிகளும் இயங்கி வருகின்றன.மாற்றுத்திறனாளிகளுக்கு, பிரத்யேகமாக கல்வி கற்பிக்க, சிறப்பு ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, &'பிரைல்&' எனப்படும், புள்ளி எழுத்துக்கள் முறையில், கல்வி கற்பிக்கப்படுகிறது.செவித்திறன் குன்றிய மாணவர்களுக்கு சிறப்பு கருவி, சைகை மொழி தகவல் தொடர்புடன், கல்வி போதிக்கப்படுகிறது. பார்வையற்ற எட்டு மாணவர்களுக்கு, ஒரு சிறப்பாசிரியர்; செவித்திறன் குன்றிய, 10 மாணவர்களுக்கு ஒரு சிறப்பாசிரியர் நியமிக்கப்பட வேண்டும் என்பது விதி. மாற்றுத்திறனாளிகள் எதிர்காலம் கருதி, அவர்களுக்கு தரமான கல்வி அளிக்கவும், அதற்கான சிறப்பு பள்ளிகளை நிர்வகிக்கவும், 2011ல் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை உருவாக்கப்பட்டது.இதற்கான, முதன்மை கல்வி அதிகாரி பணியிடமும் ஏற்படுத்தப்பட்டது.இந்த பணியிடத்தில், பள்ளி கல்வித் துறை வாயிலாக, முதன்மை கல்வி அலுவலர் நியமிக்கப்பட்டார். தற்போது, மாற்றுத்திறனாளிகள் நலத் துறையில், முதன்மை கல்வி அதிகாரி பணியிடம் காலியாக உள்ளது. இதனால், ஆறு ஆண்டுகளாக, சிறப்பு பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படவில்லை. கொரோனா ஊரடங்கால், ஆன்லைன் வழியாகவும், &'டிவி&' வழியாகவும் கல்வி கற்பிக்கப்படுகிறது. அதேபோல, மாற்றுத்திறனாளிகள் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.தேர்வுகள், கற்பிக்கும் முறை ஆகியவற்றை, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஏற்ப மாற்றி நடைமுறைப்படுத்த, சிறப்பு பள்ளிகளில் முறையான ஆய்வுகளும் கண்காணிப்பும் அவசியம். மாற்றுத்திறனாளி மாணவர்கள் கற்றலுக்கான கருவிகள், உடல் பாதிப்பை சமன் செய்யும் உபகரணங்கள், மடிக்கணினி உள்ளிட்டவை அரசின் நலத்திட்டங்கள் வாயிலாக, உரிய நேரத்தில் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.இதற்கு, முதன்மை கல்வி அதிகாரியின் சேவை மிகவும் அவசியம். எனவே, மாற்றுத்திறனாளி மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, முதன்மை கல்வி அதிகாரியை உடனடியாக நியமித்து, பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்