இன்ஜி., கவுன்சிலிங் 63,729 பேர் தேர்வு
சென்னை: இன்ஜினியரிங் கவுன்சிலிங்கின் இரண்டாம் சுற்றில், 63,729 மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.தமிழக இன்ஜினியரிங் கல்லுாரிகளில் உள்ள 1.80 லட்சம் இடங்களை நிரப்ப, மூன்று கட்டங்களாக இணையவழி கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதன் முதல் சுற்று, கடந்த மாதம் துவங்கி இம்மாதம் 10ம் தேதி நிறைவடைந்தது. அதில், பொதுப்பாடம், தொழிற்கல்வி படிப்புகளில், 19,922 பேர் சேர்ந்தனர்.இம்மாதம் 10ம் தேதி இரண்டாம் சுற்று கவுன்சிலிங் துவங்கியது. இதல், 77,948 பேர் சேர்க்கைக்கு தகுதியுடையோராக அழைக்கப்பட்டனர். அவர்களில், 62,270 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்தனர். அவர்களில், 55,875 பேர் தற்காலிக ஒதுக்கீட்டு ஆணைகளை பெற்றனர்.அரசு பள்ளி மாணவருக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டு பிரிவில், 8,738 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்தனர். அவர்களில், 7,854 பேருக்கு ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இரண்டாம் சுற்றில், 63,729 பேர் ஒதுக்கீட்டு ஆணைகளை பெற்றுள்ளனர்.மூன்றாம் கட்ட கவுன்சிலிங், வரும் 23ம் தேதி துவங்கி, செப்., 4ல் முடியும்.