உள்ளூர் செய்திகள்

எம்.இ., மொத்த இடங்களில் 65% அரசு ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வர முடிவு

பி.இ., சேர்க்கையில், சிறுபான்மை அல்லாத பொறியியல் கல்லூரிகளாக இருந்தால், மொத்த இடங்களில், 65 சதவீத இடங்களும், சிறுபான்மை கல்லூரிகளாக இருந்தால், 50 சதவீத இடங்களும், அரசு ஒதுக்கீட்டின் கீழ், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. மீதமுள்ள இடங்களை, கல்லூரி நிர்வாகங்கள் நிரப்பிக் கொள்கின்றன. ஆனால், இந்த நடைமுறை, முதுகலை பட்டப் படிப்பான எம்.இ., சேர்க்கையில் இல்லை. 100 சதவீத இடங்களையும், கல்லூரி நிர்வாகங்களே நிரப்பிக் கொள்கின்றன. இதனால், ஏழை, எளிய மாணவர்கள், தனியார் கல்லூரிகளில், முதுகலை படிப்பை படிக்க முடியாத நிலை உள்ளது. பணம் இருப்பவர்கள் மட்டுமே, தனியார் கல்லூரிகளில், எம்.இ., படிப்பை படிக்க முடியும். இந்நிலையில், பி.இ., படிப்பைப்போல், எம்.இ., சேர்க்கையிலும், அரசு ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வு நடத்தி, மாணவர் சேர்க்கை நடத்திட, அண்ணா பல்கலை திட்டமிட்டு உள்ளது. சிறுபான்மை அல்லாத கல்லூரிகளாக இருந்தால், 65 சதவீத இடங்களையும், சிறுபான்மை கல்லூரிகளாக இருந்தால், 50 சதவீத இடங்களையும், அரசுக்கு ஒதுக்கீடு செய்யவும், இந்த இடங்களை, கலந்தாய்வு மூலம் அரசே நிரப்பவும், அண்ணா பல்கலை முடிவெடுத்து உள்ளது. இந்த நடவடிக்கையை, அண்ணா பல்கலை எடுத்தால், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களும், எம்.இ., படிப்பில் சேர்கின்ற நிலைமை உருவாகும். வரும் கல்வியாண்டிற்கு முன்னதாக, அரசின் அனுமதியை பெற்று, திட்டத்தை செயல்படுத்திட, பல்கலை முடிவு செய்துள்ளது. ஆனால், பல்கலையின் இந்த திட்டத்திற்கு, தனியார் பொறியியல் கல்லூரிகள், சம்மதம் தெரிவிக்குமா என்பது தான், கேள்விக்குறியாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி, எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., ஆகிய முதுகலை படிப்புகளில், கோவை மண்டலத்தில், 12,190 இடங்கள்; சென்னை மண்டலத்தில், 7,511; மதுரை மண்டலத்தில், 2,470;, திருச்சி மண்டலத்தில், 3,373; நெல்லை மண்டலத்தில், 5,195 இடங்கள் என, மொத்தம், 30,739 இடங்கள் உள்ளன. இதில், 12 ஆயிரம் முதல். 14 ஆயிரம் இடங்கள் வரை, அரசுக்கு கிடைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்