சிலம்பத்தில் அசத்தும் மாணவர்கள்
நம் பாரம்பரிய தற்காப்பு கலைகள் கவனிப்பாரில்லாமல், காணாமல் போய்விடுமோ என்ற கவலையை நம் இளைய தலைமுறையினர் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்; உடுமலையில் நடந்த சிலம்ப போட்டியில், இரண்டு நிமிடத்தில், காற்றை கிழித்த மாணவர்களின் சிலம்பங்கள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. சிலம்பம் எனப்படும் பாரம்பரிய கலை, பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாகும். ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் நம்நாடு சுதந்திரம் பெற போராடிய பல குறுநில மன்னர்களுக்கும், இக்கலை கைகொடுத்து உதவியுள்ளது. ஆங்கிலேயர்களின் பீரங்கி குண்டுகளுக்கும், துப்பாக்கி குண்டுகளுக்கும் ஈட்டி முனைகளும், வாள் வீச்சுகளும் ஒரு சவாலாகவே இருந்தன. இதனால் சிலம்ப பயிற்சியளிப்பதற்கு கடுமையான எதிர்ப்புகள் மேலோங்கிய போதும், சற்றும் பின்தங்கி செல்லாமல், தொடர் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இவ்வாறு, நம் பாரம்பரிய கலைக்கு பல்வேறு சோதனைகள் ஏற்பட்ட போதும், அவற்றையெல்லாம் தாண்டி, பல நுாற்றாண்டுகளை கடந்து, இன்றும் நம் இளைய தலைமுறையினரிடம், சிலம்பம் சுழன்றே வருகிறது. பல்வேறு புராணங்களிலும், சுவடிகளிலும் சிறப்பாக கூறப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய கலை தற்போது தற்காப்பு கலையாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. கோவில் திருவிழா மற்றும் கலைநிகழ்ச்சிகளின் போது மட்டுமே இக்கலைக்கான முக்கியத்துவம் கிடைத்து வந்தது. இளைய தலைமுறையினரிடம், இப்பயிற்சி குறித்த, விழிப்புணர்வு ஏற்படுத்த, சிலம்பாட்ட பயிற்சி பள்ளிகள் மூலம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லுாரிகளில், பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டன. இப்பயிற்சியால், மன ஒருமைப்பாடு ஏற்பட்டு, பய உணர்ச்சிகள் விலகுகின்றன. ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. அனைத்து நரம்புகளையும் வலுப்பெற செய்கிறது.கலையாக மட்டுமின்றி உடலுக்கு ஏற்ற சிறந்த உடற்பயிற்சியாகவும் உள்ளது. இதனால், அனைத்து தரப்பினரிடையே சிலம்பம் பயில ஆர்வம் ஏற்பட்டது. நேற்று உடுமலையில், ஜீவா சிலம்பம் அசோசியேஷன் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட சிலம்பாட்ட போட்டியில், 5 வயது முதல் 21 வயதுடைய மாணவர்கள், பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். இரண்டு நிமிடங்களில், ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, ஆயுதப்பிரிவு, கைமுறை பாடங்கள் ஆகிய பிரிவுகளில், திறமைகள் வெளிப்பட்டன. போட்டியில், பங்கேற்றவர்கள் ஆர்வமும், திறமையும், சிலம்ப கலை என்றும் அழியாது என உறுதியளித்தன.