மதிப்பெண் எனும் மாயை!
இத்தருணத்தில் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். எல்லோராலும், முதல் மாணவராக வருவது நடைமுறையில் சாத்தியம் இல்லை! மதிப்பெண் என்பது ஒருவர் கல்வியில் எப்படி சிறந்து விளங்குகிறார் என்பதற்கு ஒரு சான்று. மேற்படிப்புக்கும், சில சமயம் வேலைக்கும் இது உதவுகிறது என்பது உண்மை. ஆனால், நீங்கள் அறிவு பெற்றவரா, திறமை பெற்றவரா என்றுதான் பின்னாளில் ஆராய்ந்து பார்க்கப்படும். அதிக மதிப்பெண் பெற்றவரா என்றல்ல! தேர்வு என்பது ஒருவர் கற்றதை எப்படிப் புரிந்து கொண்டு அதனை வெளிப்படுத்துகிறார் என்பதன் அடையாளமே. கல்வி என்பது ஒருவர் பெற்றதை(மதிப்பெண்) விட கற்றது எவ்வளவு என்பதைப் பிரதிபலிக்க வேண்டும். பணி ஒன்றில் அமர்ந்த பிறகு நமது உழைப்பு, ஆர்வம், சிந்தனை, படைப்பாற்றல், தலைமைப் பண்பு, தகவல் தொடர்பு, முடிவெடுக்கும் திறன், சீர்மை, நேர்மை, சக மனித உறவுமுறை, புத்தி சாதுர்யம், சாமர்த்தியம், புற அறிவு, கவனம், பொறுப்புணர்வு, முன்னுக்கு வரும் வேட்கை இவற்றின் மூலம் நாம் பெறும் வெற்றி தான் பேசும். அன்று ஒருவர் எடுத்த பள்ளி இறுதி அல்லது கல்லூரி மதிப்பெண் பற்றி யாரும் பேசப் போவதில்லை. மதிப்பெண் சற்று குறைந்து போனால் ஒருவரின் வாழ்க்கையே முடிவுக்கு வந்து விட்டதாக எண்ணுவது மிகப் பெரிய தவறு. உங்கள் வாழ்வை நிர்ணயம் செய்வது அந்த மதிப்பெண் மட்டுமே அல்ல. நீங்கள் எதிர்பார்த்திராத உயரங்களை பின்னாளில் நீங்கள் அடையக் கூடும். சரியான மனப்பாங்கும், அதற்கேற்ற திட்டங்கள் மற்றும் தன்னம்பிக்கை இருந்து விட்டால், நம்புங்கள் முதலில் உங்களை! மாறாக தவறான முடிவுகள் எடுப்பது, தன்னையே தண்டித்துக் கொள்வது இவை எல்லாம் நிச்சயம் தேவையற்றவை. மதிப்பெண் குறைவாக எடுத்து, பள்ளித் தேர்வை பாதியில் நிறுத்தி விட்டு வாழ்வில் மிகப் பெரிய உச்சங்களைத் தொட்டவர்களை நினைத்துப் பார்த்தல் நன்மை தரும். சூழ்நிலையை, பள்ளியை, பெற்றோரை, மற்றோரை, காரணம் காட்டாமல் பொறுப்பை முழுமையாக ஏற்று சூழ்நிலையை உருவாக்குபவராக மாறுதல் பலன் தரும். காரணம் சொல்பவர்கள் வெற்றி பெறுவதில்லை; வெற்றி பெறுபவர்கள் காரணம் சொல்வதில்லை! தன்னை ஒப்புக் கொள்வது என்பது ஒருவர் தனது வாழ்க்கையில் மகிழ்வைக் காண்பதாகும். ஒருவர் தன்னை வெறுப்பது என்பது வாழ்க்கையை வெறுப்பது போன்றது. வாழ்க்கையை விரும்பி ஒரு செயலில் இறங்க முற்படும் போது அதற்குத் தேவையான சக்தி தானே உருவாகிறது. எனவே, நீங்கள் ஒரு வேளை நினைத்தது போல தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறவில்லை என்றால் கூட உங்களை ஒரு நாளும் வெறுக்க வேண்டாம். எல்லோருக்கும் இந்த உலகில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. அதனை உருவாக்கும் நபர் வெளியில் இல்லை. அவர் நமக்குள் தான் இருக்கிறார். உங்களுக்குள் அந்த வெற்றியாளனைக் காணுங்கள்! -முனைவர் பாலசாண்டில்யன் balasandilyan@yahoo.com