புதியரக திராட்சை சாகுபடி
தேனி மாவட்டத்தில் ஆண்டுதோறும் திராட்சை சாகுபடியாகிறது. ஆனால் மகசூல் அதிகம் தரும் ரகங்கள், ஏற்றுமதிக்கு தகுதியான ரகங்கள், செவட்டை, சாம்பல் நோய்களை எதிர்கொள்ளும் ரகங்கள் இன்றி தொடர்ந்து ஒரே ரகத்தை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது கோவை வேளாண் பல்கலை., பழத்துறையும், ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையமும், அப்பீடா எனப்படும் ஏற்றுமதி அமைப்பின் உதவியுடன் புதிய ரகங்களை ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையத்தில் சோதனை முறையில் சாகுபடி செய்ய முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் சுப்பையா கூறுகையில், கோவை வேளாண் பல்கலை., பழத்துறையுடன் இணைந்து கிரீம்சன், ரெட் குளோப், தாம்சன், பேன்டசி, நானா சாகிப் உள்ளிட்ட ரகங்கள் சாகுபடி செய்ய உள்ளோம். இந்த ரகங்கள் ஏற்கெனவே உள்ளது. அதில் மாற்றங்கள் செய்து தேர்வு ரகமாக சாகுபடி செய்து, விவசாயிகளுக்கு வழங்க உள்ளோம் என்றார். இதன்மூலம் கம்பம் பள்ளத்தாக்கில் ஏற்றுமதி ரகங்கள் சாகுபடி ஆரம்பமாகும் சூழல் எழுந்துள்ளது.